அ.ம.மு.க உடைகிறதா? டிடிவி தினகரன் - தங்க தமிழ்செல்வன் இடையே மோதல்

டி.டி.வி. தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரின் உதவியாளரை அழைத்து தங்கதமிழ்செல்வன் தனது கோபத்தை காட்டியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2019, 09:43 AM IST
அ.ம.மு.க உடைகிறதா? டிடிவி தினகரன் - தங்க தமிழ்செல்வன் இடையே மோதல் title=

சென்னை: தேனி நாடாளுமன்ற தொகுதியில் தோல்வியடைந்ததில் தங்க தமிழ்ச்செல்வன் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாகவும், தன் தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கு சிலர் தான் காரணம் என அவருக்கு தெரிய வந்ததால், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதுக்குறித்து கேட்டதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனால் டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இடையே மோதல் ஏற்பட்டு என்பதை நிரூபிக்கும் விதமாக ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் டிடிவி தினகரனின் உதவியாளரும் தங்க தமிழ்ச்செல்வனும் பேசிக்கொள்கிறார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டது, ‘அண்ணன் எங்கே இருக்கிறார். இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் செய்வதை உங்கள் அண்ணனை நிப்பாட்டச் சொல்லுப்பா. நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீ உள்பட அழிந்து போய் விடுவீர்கள். நான் நல்லவன். நேற்று தேனி மாவட்டத்தில் கூட்டம் போட்டீங்க. நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன். போடவா? நீ பாரு. என்ன நடக்கிறது என்று நீ பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. இந்த மாதிரி அரசியல் செய்தால் தோற்று தான் போவிங்க. என்றைக்கும் ஜெயிக்க மாட்டிங்க’ இப்படி தங்க தமிழ்ச்செல்வன் பேசுவதாக உள்ளது.

அதாவது தமிழகத்தில் 38 தொகுதி நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் அ.ம.மு.க. ஒரு இடங்களிலும் வெற்றி பெற வில்லை. இதனால் பல நிர்வாகிகள் அதிமுக-வில் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில், அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுகவில் இணைவதாக செய்திகள் வெளியாகின. இதனைதொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் ‘தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க-வுக்கு வந்தால் வரவேற்போம்’ என்றும், அதேபோல அமைச்சர் கடம்பூர் ராஜூவும் ‘தங்கதமிழ்செல்வன் அதிமுக-வில் இணைந்தால் தாயுள்ளத்தோடு ஏற்போம்’ என்று கூறி இருந்தார்கள்.

அதிமுக அமைச்சர்கள் கூறியதை அடுத்து, தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் அதிமுகவில் இணைவார் என பரவலாக பேசப்பட்டது. இதனால் தேனிக்கு புதிய நிர்வாகியை டி.டி.வி. தினகரன் நியமிக்கச் சொல்லியதாகவும், அதன் அடிப்படையிலேயே நேற்று கூட்டம் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

இரகசிய கூட்டம் போட்டு எனக்கு பதிலாக வேறு ஒருவரை போடுவதா என்ற ஆதங்கத்தின் காரணமகா தான் டி.டி.வி. தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரின் உதவியாளரை அழைத்து தங்கதமிழ்செல்வன் கோபத்தைக் கொட்டித்தீர்த்துள்ளார்.

Trending News