ஆதரவற்ற முதியவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய தமிழக முதல்வர்

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து கொண்டாடியா தமிழக முதல்வர். ஆதரவற்ற முதியவர்கள் மகிழ்ச்சி...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2019, 11:29 AM IST
ஆதரவற்ற முதியவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய தமிழக முதல்வர் title=

சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேர்ச்சைத் திருத்தலம் புனித அன்னை தேவாலயத்திற்க்கு சென்று கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுடன் கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் மற்றும் துணை முதல்வர், பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டனர். இந்த சம்பவத்தால் ஆதரவற்ற முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

அதுமட்டுமில்லாமல், கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியும் கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது, 

அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், கிறிஸ்துவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களின் வாசலில் வண்ண நட்சத்திரங்களைக் கட்டி, கிறிஸ்துமஸ் மரம் மற்றும் இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் குடில் அமைத்து, வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, கர்த்தரை வழிபட்டு, உற்றார், உறவினர்களுடன் விருந்துண்டு, மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள்.

வழி தவறிய ஆட்டை தேடிச் சென்று மீட்கும் மேய்ப்பன் போன்று, பாவம் எனும் முள்ளிடையே நிற்கும் மனிதர்களையும் தேடிச் சென்று மீட்பது என்னுடைய பணி என்றுரைத்த இயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.

 

அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு. பழனிசாமி கூறியுள்ளார்.

Trending News