மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பசு, காளை, கன்று, ஒட்டகம் இறைச்சி விற்கப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாதங்கள் நடைபெற்றன.
அப்பொழுது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-
மாட்டு இறைச்சிக்கு எதிராக மத்திய அரசு தடை விதித்ததை புதுச்சேரி அரசு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். யார் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை மத்திய அரசு வற்புறுத்த இயலாது. நாடு முழுவதும் 40 சதவீத மக்கள் அசைவ உணவு உண்பவர்கள்.
தோல் தொழிலிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளின் சந்தை விற்பனைக்கும் தடை விதித்துள்ளது. ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது.
மேலும், இச்சம்பவத்தால் அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன.
புதுச்சேரி அரசு சார்பில் மக்கள் நலன் கருதி, மத்திய அரசின் தடை சட்டத்தை நிச்சயம் அமல்படுத்த மாட்டோம். தேவைப்பட்டால் புதுவையில் மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும். இதுதொடர்பாக மோடிக்கு இன்று கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.