சென்னை: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக ஏற்பாடு செய்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க பரிந்துரை செய்யும், இந்த மாசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த மாசோதா நிறைவேற்றப்பட்டது. இது அக்டோபர் மாதம் முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது.
இந்த முடிவிற்கு எதிர்ப்பை தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல், 370 வது பிரிவு பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனிமேல் அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என வைத்து கொண்டால் நன்றாக இருக்கும். காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வரும் வரை குடியரசுத் தலைவர் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியிருந்தார்.
இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 10 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்திருக்கிறது. அதாவது சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 10 அன்று மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று மாலை திமுக ஏற்பாடு செய்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எப்படி கையாளுவது? அதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்ன விதமான போராட்டம் நடத்துவது? என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளது.