Good News: விரைவில்.. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்

Chief Minister's Breakfast Scheme: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் முதல்வர். இதுத்தொடர்பான அறிவிப்பு தமிழக பட்ஜெட் கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு எனத் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 18, 2024, 10:11 AM IST
Good News: விரைவில்.. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் title=

What Is Tamil Nadu Breakfast Scheme: தமிழ்நாட்டின் தொடக்க பள்ளிகளில் அரசு முன்னெடுப்பால் மாணவர்களுக்கு மத்திய சத்துணவு உடன் காலை உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னோடி திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

காலை உணவு திட்டம் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில், மேலும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் அளித்துள்ளார். அதாவது வரும் காலங்களில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டு இருப்பதாகவும், வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தில் இதுத்தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

காலை உணவுத் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் என்ற நோக்கில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு "இலவச காலை உணவுத் திட்டத்தை" அறிவித்தது. 

மேலும் படிக்க - 'எனது கனவு, கண் முன்னே பலன் தருகிறது...' காலை உணவு திட்டம் - முதல்வர் ஸ்டாலின் ஹேப்பி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு,க. ஸ்டாலின் "காலை சிற்றுண்டி திட்டத்தை" மதுரையில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளிக் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தமிழக முதல்வர் உணவருந்தி மகிழ்ந்தார். அதன்பிறகு படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. 

மதிய உணவுத் திட்டம்

குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கும்விதமாகவும், இடைநிற்றலை தடுக்கும் வகையிலும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் மதிய உணவுத் திட்டம். தமிழக முதல்வராக இருந்த காமராஜர், மாநிலத்தின் அனைத்து தொடக்கப்  பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அதன் பின்னர் இந்த திட்டத்தை நிறுத்தாமல் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனும் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார். பின்னர் இது அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனையடுத்து கலைஞர் ஆட்சியின்போது மதிய உணவு திட்டம் என்பது சத்துணவு திட்டம் என்று மாற்றப்பட்டு, 15 நாட்களுக்கு ஒருமுறை முட்டை வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சியிலும் இந்த சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வந்தது. இது படிப்படியாக மாறி தினமும் உணவுடன் சேர்த்து முட்டை வழங்கப்பட்டது. அதன்பிறகு முட்டையுடன் சேர்த்து வாரத்துக்கு மூன்று நாட்கள் ஏதேனும் பயிர் வகைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கப்பட்டது. இப்படி சத்துணவு திட்டத்தில் ஒவ்வொரு அரசும் பல மேம்பாடுகளை செய்து வந்தது. 

வறுமையில் இருக்கும் ஏழைக் குழந்தைகள் பலருக்கும் மத்திய உணவுத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்த நிலையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கப் பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் வகையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

மேலும் படிக்க - காலை உணவுத் திட்டம்: 20 வருடங்களில் சிறந்த விளைவு- அமைச்சர் பிடிஆர்

காலை உணவு திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்

காலை உணவுத் திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதுக்குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். 

அதில், "அடித்தட்டு மக்களின் ஏற்றம், எல்லோருக்கும் எல்லாம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு, கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் எனப் போற்றி முன்னுரிமை அளித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு குழந்தைகூட பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடக்கூடாது, போதிக்கும் வேளையில் ஊன்றிப் பாடங்களைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, நாட்டுக்கே முன்னோடியாக, கடும் நிதிநெருக்கடிக்கு இடையிலும் செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டம் நாட்டு மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் அன்றாடப் பணிச்சுமையைக் குறைத்து இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியிட்ட செய்தியை கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

மேலும் அந்த பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின்,"மாணவச் செல்வங்கள் படிப்பைப் பாதியில் கைவிடுவதை இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பள்ளிக்கூடங்களிலும் சமுதாயத்தில் பல நற்பயன்களுக்கு வித்திட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சிற்றுண்டி உண்ட பின், மீதமிருக்கும் உணவு வீணாவதில்லை.

மேலும் படிக்க - இலவச காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்திடும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மாறாக, ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் யார் காலை உணவு சாப்பிடாமல் வந்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு அந்த உணவை வழங்குகின்றனர் என்ற செய்தி அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். காலையில் வேலைக்குச் செல்லும் தனது தாயால் சமைக்க முடியவில்லை என்பதால் பசியோடு பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், பள்ளியில் பகிர்ந்தளிக்கப்படும் சிற்றுண்டியை உண்பதாகக் கூறியதைப் படிக்கும்போது நெகிழ்ந்தேன். 

அவரைப் போல, பசியோடு வரும் பல மாணவர்களும் உணவருந்திய பின் வகுப்புக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்டு, ஒரு நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் திட்டம், மேலும் பற்பல சமூக நன்மைகளுக்கு வித்திடுகிறது நிறைவைத் தருகிறது. உணவை வீணாக்காமல், பகிர்ந்தளிக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

எத்தனைக் கடினமான சூழ்நிலை இருந்தாலும் நம் வருங்காலத் தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற எனது கனவு, கண் முன்னே பலன் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்" என அந்த பதிவில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க - காலை உணவு திட்டத்தின் மெனு: சிறுதானியம் முதல் ரவா கிச்சடி வரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News