மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்வதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: R.S.பாரதி

மக்கள் வரிப்பணத்தில் அதிமுகவையும், அதன் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியையும் முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என DMK MP பாரதி கோரிக்கை!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 12:20 PM IST
மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்வதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: R.S.பாரதி title=

மக்கள் வரிப்பணத்தில் அதிமுகவையும், அதன் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியையும் முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என DMK MP பாரதி கோரிக்கை!!

-  கழக அமைப்பு செயலாளர் திரு. RS.பாரதி MP அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "கொரானா பாதிப்பு (Coronavirus) காரணமாகவும் மற்றும் புயல் பாதிப்பு (Storm damage) காரணமாகவும் தமிழக மக்கள் இன்னலுற்ற நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 5,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் தமிழக அரசை (TN Govt) கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை பல மாதங்களாக கண்டுகொள்ளாத அதிமுக அரசு, விரைவில் நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை மனதில் வைத்து, பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு (Ration card) ரூ2,500 ரொக்கமாகவும், அரிசி மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென்று அறிவித்தார். 

மேலும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின் இடையே இந்தத் திட்டத்தை தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palaniswami) பெயரை AIADMK கட்சி வண்ணத்தில் அடித்தும், அவரது படத்தையும் துணை முதலமைச்சர் படத்தையும் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்கள் படத்தையும் அச்சடித்து ஏதோ அதிமுகவினர் தான் பொங்கல் பரிசு (Pongal gift) வழங்குவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு டோக்கன்களை அதிமுகவினர் வழங்கி வந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் சட்டவிரோதமாக பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை தொடர்ந்து வினியோகித்து வந்த நிலையில், கழகத்தின் சார்பில் சென்னை (Chennai) உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் கழகத்தின் சட்ட திட்டத் திருத்தக்குழு செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான திரு.பி. வில்சன் MP அவர்கள் ஆஜராகி வாதாடினார்.

ALSO READ | மத்திய அரசிடம் 1464 கோடி ரூபாய் நிதி கோரும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் கட்சியின் சின்னத்தையோ தங்களுடைய அரசியல் கட்சியின் தலைவர்களையோ முன்னிலைப்படுத்தி அல்லது அவர்களை பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கின்ற வகையில், மக்கள் பணத்தை பயன்படுத்தி விளம்பரப் படுத்தக் கூடாது என்றும்; அவ்வாறு விளம்பரப்படுத்தினால் அந்த அரசியல் கட்சி மீது, அரசியல் கட்சியின் சின்னங்களுக்கான விதிமுறைகளின் (Election Symbols (Reservation &Allotment) Order, 1968) கீழ் அந்த அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் (Delhi High Court) உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் 7.10.2016 ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு விதிமுறைகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்று தனது வாதத்தில் குறிப்பிட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். 

அவரது வாதத்தின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு 31.12.2020 மாலை 5 மணிக்குள் தமிழக அரசு (TN Govt) சுற்றறிக்கை வெளியிட்டு, அதில் அரசின் சார்பில் வழங்கப்படும் டோக்கன்கள் மூலமாக மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும்; அதற்கு மாறாக ஆளுங்கட்சியினர் வழங்கப்படும் டோக்கன்கள் பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக குறிப்பிட்டு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை மீறி ஆளும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முன்னிலைப்படுத்தி; வாக்காளர்களிடம் அவரை பிரபலப்படுத்தி; வரும் தேர்தலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக உருவாக்கி அதிமுகவிற்கு தேர்தல் லாபம் கிடைக்கின்ற வகையில் அரசின் பணத்தையும், அதிகாரத்தையும் அதிமுகவும் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் பயன்படுத்தி வருகின்றனர். இவையெல்லாம் தமிழ்நாடு அரசின் பணத்திலும்; மக்களின் வரிப்பணத்திலும் வெளியிடப்பட்டு இருப்பதாகும்.  சுமார் ஆயிரம் கோடி செலவில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

ALSO READ | Tamil Nadu Election 2021: களமிறங்கும் காங்கிரஸ், ராகுல் காந்தியின் திருப்பூர் பிரசாரம் எடுபடுமா?

இது குறித்த புகாரினை, கழகத்தின் சார்பில் நானும் கழக சட்டத் திட்ட திருத்தக் குழு செயலாளர் பி. வில்சன் எம்பி, சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் மற்றும் தலைமைக் கழக வழக்கறிஞர் இரா. நீலகண்டன் ஆகியோரும் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு அவர்களை நேரில் சந்தித்து அளித்தோம்.
அப்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் 7.10.2016ஆம் தேதியன்று வெளியிட்டுள்ள விதிமுறை சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, நான் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு சத்யபிரதா சாகு அவர்களிடம் தமிழக அரசின் சார்பில் அதிமுகவை முன்னிலைப்படுத்தி வெளியிடப்படும் விளம்பரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது; ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்.
 இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையம் 7.10.2016ஆம் தேதி அன்று வெளியிட்ட விதிமுறைகளை கீழ்காணுமாறு சுட்டிக்காட்டி நேற்று கடிதம் அனுப்பி உள்ளார் :

“4. Accordingly, the Commission has directed that no political party shall henceforth either use or allow the use of any public funds or public place or government machinery for carrying out any activity that would amount to advertisement for the party or propagating the election symbol allotted to the Party.

 5. It is clarified that any violation of the above directions would be treated as violation of a lawful direction of the Commission within the meaning of paragraph 16A of the Election Symbols (Reservation &Allotment) Order, 1968.”

இது முழுக்க முழுக்க, அதிமுகவையும், அதன் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமியையும் முன்னிலைப்படுத்தி வெளியிடப்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு விளம்பரங்களுக்கு பொருந்தும்.

ஆகவே, இனிமேலாவது தமிழக அரசு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து அதிமுகவையும், அதன் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமியையும் ஆதரிக்கும் வகையில் எந்த விளம்பரங்களையும் வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News