தமிழ் பெண்ணுக்கு கோவாவில் நடந்த இந்தி திணிப்பு... கொந்தளித்த ஸ்டாலின், உதயநிதி - என்ன பிரச்னை?

Goa Hindi Imposition Issue: கோவா விமான நிலையத்தில் தமிழ்நாடு பெண்ணிடம் இந்தி திணிப்பில் ஈடுபட்ட மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை வீரரின் செயல் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 14, 2023, 02:35 PM IST
  • பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா - ஸ்டாலின்
  • மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும் - உதயநிதி
  • பல்வேறு அரசியல் தலைவர்கள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் பெண்ணுக்கு கோவாவில் நடந்த இந்தி திணிப்பு... கொந்தளித்த ஸ்டாலின், உதயநிதி - என்ன பிரச்னை? title=

Goa Hindi Imposition Issue: கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் (CISF), இந்தி மொழிதான் தேசிய மொழி என தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வாதிட்டு துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பெண்ணிடம் இந்தியில் பேசியபோது, அந்த பெண் பயணி தனக்கு இந்தி தெரியாது என்று மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) அதிகாரிகளிடம் கூறியதாகவும், அதற்கு அந்த பாதுகாப்பு படை வீரர்கள் இந்தி தேசிய மொழி என்று வாதிட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து,  

இந்தி வெறும் அதிகாரப்பூர்வ மொழிதான்...

இதுகுறித்து ஊடகம் ஒன்றிடம் பேசிய பெண் பயணியான ஷர்மிளா ராஜசேகர், நேற்று இரவு 8.30 சென்னை செல்லும் விமானத்தின் பாதுகாப்பு சோதனைக்காக நின்றுகொண்டிருந்ததாகவும், அப்போது பெண்கள் வரிசையில் இருந்து பாதுகாப்பு படை காவலர் மற்றொரு ட்ரேவை (Tray) எடுக்குமாறு ஹிந்தியில் கூறியதாகவும் தெரிகிறது.

தொடர்ந்து ஊடகம் ஒன்றில் பேசிய ஷர்மிளா, "எனக்கு இந்தி தெரியாது என்று நான் அவர்களிடம் சொன்னேன், அதற்கு பாதுகாப்பு படையினர் என்னை கேலி செய்து நான் எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டனர். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறியவுடன், ​​தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதல்லவா என்று காவலர் கேட்டு என்னிடம் இந்தி தேசிய மொழி என்றும், இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

மேலும் படிக்க | பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு... இனி விஜயகாந்துக்கு தேமுதிகவில் என்ன பொறுப்பு?

கூட்டாச்சி தன்மை

நான் எனது மூன்று வயது மகளுடன் அங்கு இருந்தேன், நான் பாதுகாப்பு சோதனைக்கு முன் சென்று, எனது தொலைபேசியை எடுத்து, கூகுள் செய்து, இந்தி அதிகாரப்பூர்வ மொழி மட்டுமே என்று அந்த பெண் அதிகாரியிடம் காட்டினேன். நான் நடத்தப்பட்ட விதம் மிகவும் மனிதாபிமானமற்ற மற்றும் கலாச்சார உணர்வற்றதாக இருந்தது" என தெரிவித்தார். 

மேலும், ஷர்மிளா விமானத்தில் ஏறுவதற்கு முன்,  மேற்பார்வையாளரிடம் வாய்மொழியாக புகார் அளித்திருக்கிறார். மேலும் அதிகாரியின் சார்பாக அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் பயணி கூறினார். மேலும், அவர் விமான நிலைய குறைதீர்க்கும் அதிகாரிக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதுசார்ந்து அரசியல் ரீதியாகவும் பெரும் பூகம்பத்தை கிளம்பியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்டாலின் (CM MK Stalin) X தளத்தில் பதிவிட்ட நிலையில், "கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். 'தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது' என்றும், 'இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்' என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) அவரது X பக்கத்தில், "கோவா விமான நிலையத்தில் வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், 'இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா' என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க |  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளும் திருமுறை திருவிழா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News