கருணாபுரத்தில் அலறும் ஆம்புலன்ஸ்கள்! இடைவிடாமல் எரியும் சுடுகாடு! காத்திருக்கும் உடல்கள்

கள்ளச்சாராயத்தால் ஒரு ஊரே சுடுகாடாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் ஆம்புலன்ஸ்களின் சத்தமும், குடும்பத்தினரை இழந்து உறவினர்கள் அழும் மரண ஓலமும் தான் கடந்த இரண்டு நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எரியும் சுடுகாடும், அடுத்தடுத்து அடக்கம் செய்ய காத்திருக்கும் உடல்களின் வீடியோவும் நெஞ்சை நடுங்க செய்கிறது. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 21, 2024, 05:44 PM IST
  • கருணாபுரத்தில் இடைவிடாமல் எரியும் சுடுகாடு
  • வரிசையாக வந்து கொண்டிருக்கும் உடல்கள்
  • ஒட்டுமொத்த கிராமமே மீளா சோக துயரில்
கருணாபுரத்தில் அலறும் ஆம்புலன்ஸ்கள்! இடைவிடாமல் எரியும் சுடுகாடு! காத்திருக்கும் உடல்கள் title=

கள்ளக்குறிச்சி நகராட்சியில் கருணாபுரம் என்ற பகுதி உள்ளது. இங்கு தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல இரு தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் வயிற்று வலி, காய்ச்சல் போன்ற கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தது. அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அதிக பாதிப்பு ஏற்பட்டவர்களை சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்களும் அடங்குவர்.  

மேலும் படிக்க | கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்: நடிகர் சூர்யா

இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் கருணாபுரம் பகுதியில் தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்கள் ஒரு பக்கம் என்றால், கள்ளச்சாராயம் குடித்துவிட்டு உடல்நலக்குறைவுடன் வீட்டிலேயே இருக்கும் நபர்களை தேடித் தேடி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் ஒரு பக்கம் அலறிக்கொண்டிருக்கின்றன. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே, யார் வீட்டு வாசலில் அது நிற்கப்போகிறது என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடம் அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், வெறும் உடலாக ஆம்புலன்ஸில் வருவதால், அந்த சத்தம் அப்பகுதி மக்களின் தூக்கத்தை கெடுத்து துக்கத்தை கொடுத்துள்ளது. ஆம்புலன்ஸ் சத்தத்துக்கு நடுவே குடும்பத்தினரை இழந்து உறவினர்கள் கதறி அழும் காட்சிகளும் காண்போரை கலங்க செய்கிறது. 

இப்படி ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லும் அதே நேரம், கருணாபுரம் சுடுகாட்டில் அடுத்தடுத்து வெட்டியான்கள் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்த நபர்களின் உடல்களை இடைவேளையே இல்லாமல் எரித்துக்கொண்டிருக்கின்றனர். அடுத்தடுத்து உடல்களை வைத்து விறகுகளை அடுக்குகின்றனர். ஒரே சமயத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது தான் உச்சபட்ச வேதனை. ஒரு ஊரே தங்கள் வீட்டில் பலரை இழந்து தவிக்கிறது. ஒரே தெருவில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சாமியானா பந்தல்கள் தான் அனைத்து தெருக்களிலும் தென்படுகிறது. கையில் மாலைகளுடன் தங்கள் உறவினர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேதனையுடன் ஓடி வரும் உறவினர்கள், கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் அழுத்தமாக சொல்லிவிட்டு செல்கின்றனர். 

தாய் - தந்தையை இழந்த சிறுவர்கள், கணவனை இழந்த மனைவி என பலர் நிற்கதியாய் நிற்கும் காட்சிகள் மனதை ரணமாக்குகிறது. கடந்த ஆண்டு இதே சூழல் தான் மரக்காணத்தில் நடந்தது. இனி இப்படி ஒரு கள்ளச்சாராய மரணம் நடந்துவிடக்கூடாது என்பதே தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.

மேலும் படிக்க | நரேந்திர மோடி ஆட்சியில் சாராயம் குடித்து நூறு பேர் செத்துப்போனார்களே, பதவி விலகினாரா? - ஈவிகேஎஸ் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News