மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பாஜக-அதிமுக கூட்டணியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ரபேல் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் மிகவும் கடுமையாக சாடி உள்ளார்.
இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது, இன்று ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மூலம் மோடி அரசு ஊழல் அரசு என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஊழலுக்கான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து ரஃபேல் பேரத்தில் ஊழல் செய்தவர்கள் சட்டத்தின் முன் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.
ரஃபேல் விவகாரத்தில் பதில் கூறாமல், வழக்கு விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தது மோடி அரசு. அவர்களை தூக்கி எறிவதற்கான நேரம் வந்துவிட்டது எனக் கடுமையாக விமர்சித்தார் சீத்தாராம் யெச்சூரி.
முன்னதாக ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையான பத்திரிகையில் வெளியான ரபேல் ரகசிய ஆவணங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை நிராகரித்ததோடு, அனைத்து ஆவணங்களும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விரைவில் அதுக்குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.