மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை ஏற்று கொரோனா பரவலை தடுக்க முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள்!!
"மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை ஏற்று கொரோனா பரவலை தடுக்கவும் - பிறநோய் பாதிப்புகளுக்குத் தடையின்றி சிகிச்சை வழங்கவும் - முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "கொரோனா நோய் கிராமப்புறங்களிலும் படுவேகமாகப் பரவி - சென்னையிலும் தொடருவது குறித்தும், இதைத் தடுத்து, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி கலந்துரையாடலின் போது, அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், பின்வரும் அவற்றை முதலமைச்சர் திரு. பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்:
1) மருத்துவ உள்கட்டமைப்புகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். ஆகவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வழிகாட்டுதல்களைப் பொதுவானவையாகக் கொண்டு - தமிழக கொரோனா நோய் தொற்று சூழ்நிலைக்கு ஏற்ப அரசே நோய்த் தடுப்பு- சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான, செயல்முறைக்கேற்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.
2) நகரங்கள் முதல் கிராமங்கள்வரை நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையிலும், “சமூகப் பரவல் இல்லை” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது, மக்களுக்கு விபரீதத்தை உணர்த்தத் தவறும் ஆபத்தான போக்கு. ஆகவே சமூகப் பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமித்து- அறிக்கை பெற்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3) தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஆகவே, “நோய்த் தொற்றாளரைக் கண்டுபிடிப்பது” “நோய்த் தொற்றாளரின் தொடர்புகளைக் கண்டுபிடிப்பது” “தேவையான சிகிச்சை அளிப்பது” மூலம் மட்டுமே தொற்று பரவுவதைத் தடுக்க முடியும். அப்போதுதான், 2 ஆயிரத்திற்கும் அதிகமாகிவிட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கையை, தொடர்ந்து மேலும் மேலும் அதிகரிக்கவிடாமல், குறைக்க முடியும்.
4) சென்னையில் நோய்ப் பாதிப்பு குறைந்து வருவதற்கான காரணங்களில் ஒன்று - மக்களிடையே ஏற்பட்டுள்ள சுய - எதிர்ப்பு சக்தி. ஊரடங்கினால் தொற்றின் பாதிப்பு விகிதத்தை “தள்ளிப் போட முடியுமே” தவிர- முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். ஆகவே அதற்கு ஏற்றாற் போல், தொலைநோக்குச் சிந்தனையோடு, “கொரோனா” மருத்துவக் கொள்கை ஒன்றை வகுத்துச் செயல்படுத்தி- அனைத்து மாவட்டங்களிலும் நோய்ப் பரவலைப் போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும்.
READ | WATCH: கள்ளகாதலியுடன் காரில் கணவர் ஜல்சா... நடுரோட்டி நொறுக்கி அள்ளிய மனைவி!
5) சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள “மருத்துவர்களுக்கும், படுக்கைகளுக்கும் உள்ள விகிதம்”, “செவிலியர்களுக்கும் மருத்துவப் படுக்கைகளுக்கும் உள்ள விகிதம்” “ஆக்ஸிஜனுக்கும் படுக்கைகளுக்கும் உள்ள விகிதம்” ஆகியவற்றை ஒளிவு மறைவின்றி அரசு வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.
6) “கொரோனா மருத்துவக் கழிவுகளை” சரியான முறையில் பாதுகாப்புடன் அகற்றி, அறிவியல்ரீதியாக அவற்றை அழித்து, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதையும் அழிப்பதையும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
7) முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்த்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற முற்றிலும் புதிய வாழ்க்கை நடைமுறைக்கு மக்கள் தங்களை படிப்படியாகத் தயார் செய்து கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, காசநோய் போன்ற நோயை அறவே தமிழகத்திலிருந்து போக்கிட ஆக்கபூர்வமான செயல்திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.
8) கொரோனா நோய் தவிர, பிற நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை; புதிய பிரச்சினைகள் உருவாகி, இக்கட்டான சூழல் நிலவுகிறது. ஆபத்தான நோயால் பாதிக்கப்படுவோர் - ‘டயாலிஸிஸ்’ தேவைப்படுவோர் எல்லாம் அரசு மருத்துவமனைகளுக்குப் போக முடியாமலும்- அட்மிஷன் கிடைக்காமலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து அவதிப்படுகிறார்கள். ஆகவே, பிற நோய்ப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடையின்றி சிகிச்சை பெற ஒரு பிரத்யேக “செயல் திட்டம்” உருவாக்கி, அதை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறைவேற்றிட வேண்டும்.
READ | கூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்க வேண்டும்: PMK
தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மற்ற மாநிலங்களைவிடச் சிறப்பாக இருப்பதால், அரசின் ஆக்கபூர்வமான செயல்திட்டம் மற்றும் ஊக்கமளித்தல் மட்டுமே இதுபோன்ற “கொரோனா நோய்” பேரிடர் காலத்தில் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.
ஆகவே, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை உடனடியாக நிறைவேற்றி, கிராம அளவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், கொரோனா தவிரப் பிற நோயால் பாதிக்கப்படுவோரின் தடையில்லாத சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளை அரசு மருத்துவமனைகளில் செய்திடவும் நடவடிக்கை எடுத்திடுமாறு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என வலியுத்தியுள்ளார்.