பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக முதல்வரை சந்திக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமைச் செயலகம் நோக்கி இன்று பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் மொத்தம் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். இப்போது நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும்.
என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னை எழிலகத்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினரை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் அரசு பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிகையை அரசு செவி சாய்கததால் இன்று காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர்கள் தற்போது, தமிழக முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.