Vidhya Veerappan: கல்வியும், ஆசிரியர்களும் என்னை வடிவமைத்தன என்று கூறும் வீரப்பனின் மகள்!!

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா வீரப்பன், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 20, 2020, 11:11 AM IST
  • தமிழக பாஜக-வில் இடம்பெற்ற சில பெயர்கள் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தன.
  • தனது பேராசிரியர்களும் தான் பெற்ற பயிற்சியும் தன்னை வடிவமைத்ததாக ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வித்யா தெரிவித்தார்.
  • கட்சிக்கும் நாட்டிற்கும் என்னாலான சேவையை செய்ய தான் முழு முனைப்புடன் உள்ளேன் - வித்யா வீரப்பன்.
Vidhya Veerappan: கல்வியும், ஆசிரியர்களும் என்னை வடிவமைத்தன என்று கூறும் வீரப்பனின் மகள்!! title=

கடந்த வாரம் தமிழ்நாட்டில் பாஜக தனது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியையும் செயற்குழுவில் சிலரை அமர்த்தும் செயல்பாட்டையும் மேற்கொண்டது.

தமிழக பாஜக-வில் (Tamil Nadu BJP) செயற்குழுவில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தன. சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா வீரப்பன் (Vidhya Veerappan), கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.  பிப்ரவரியில் தான் அவர் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பருவத்திலிருந்தே வித்யாவின் தந்தையின் பெயரின் தாக்கம் சுமை போல் அவரது வாழ்க்கையில் உள்ள நிலையில், சமூகம் தன்னை பரிவுடன் பார்த்தது என்றும், எப்போதும் தன்னை யாரும் ஒரு எதிரியாகக் கருதவில்லை என்றும் வித்யா கூறினார். தனது பேராசிரியர்களும் தான் பெற்ற பயிற்சியும் தன்னை வடிவமைத்ததாக ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வித்யா தெரிவித்தார்.

என் ஆசிரியர்கள் மற்றும் சகோதரிகள் இருந்திராவிட்டால், நான் எப்படி அனைத்தையும் எதிர்த்து போராடி இருப்பேன் என எனக்குத் தெரியாது என அவர் ஒப்புக்கொண்டார். வீரப்பனின் மகள் என்ற அடைமொழியோடு வந்த எனக்கு கல்விதான் ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் துணையாகவும் இருந்தது என்றார் அவர்.

ஒரு வருடம் முன்பு அவர் துவக்கிய பள்ளியில், மாணவர்களுக்கு கல்வியுடன் நன்மதிப்புகள் கற்பிக்கப்படுவதோடு மனதை ஒழுங்கான முறையில் செலுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

ALSO READ: வீரப்பன் மகளுக்கு தமிழக பாஜக-வில் பதவி: செயற்குழுவில் இன்னும் பல பிரபலங்கள்

சந்தனக் கடத்தல் வீரப்பன் (Veerappan) கொல்லப்பட்டபோது வித்யா எட்டாம் வகுப்பில் இருந்தார். ”எனது தந்தையை தான் அவ்வளவாக பார்த்ததுல்லை, துவக்கத்திலிருந்தே போர்டிங் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அவரைப் பற்றி பல உள்ளூர் மக்கள் மிக நல்ல விதமாகப் பேசுவதை நான் பார்த்துள்ளேன். ஆனால், என்னால் அவருடன் இருந்து அவரை அறிந்துகொள்ள முடியவில்லை. அவர் இறந்த பிறகு அவரது உடலைக் கூட என்னால் சரியாகக் காண முடியவில்லை.” என்று கூறுகிறார் வித்யா.

தனது வளரும் ஆண்டுகளில், சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற உறுதியோடு வளர்ந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டிற்கு செய்யும் நற்பணிகளைப் பார்த்து தான் ஈர்க்கப்பட்டதாகவும், அப்பணிகளில் தன் பங்களிப்பையும் அளிக்க தான் பாஜக-வில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார். கட்சிக்கும் நாட்டிற்கும் தன்னாலான சேவையை செய்ய தான் முழு முனைப்புடன் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Trending News