மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்களையும், அதனால், விபத்திற்குள்ளான சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். குடித்து விட்டு ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்பதோடு, அதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம், அதனால் தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஸ்காட்லாந்தில் விமானி ஒருவர் அதிகமாக குடித்து விட்டு விமானம் ஓட்ட தயாராக இருந்த நிலையில், போலீஸார் அதனை கண்டுபிடித்து, பெரிய விபத்து ஒன்று நடக்காமல் தடுத்துள்ளனர்.
ஸ்காட்லாந்தில் இருந்து நியூயார்க் செல்லும் விமானத்தை ஓட்டுவதற்கு முன்னதாக, டெல்டா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 61 வயதான அந்த விமானி, போயிங் 767 விமானத்தை இயக்க இருந்த நிலையில், புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் எடின்பர்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை செல்லும் விமானம் ஏழு மணி நேர பயணத்தை மேற்கொள்ள இருந்தது.
சம்பவம் குறித்து தெரித்த டெல்டா விமான நிறுவனம், "டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவன பணியாளர்களில் ஒருவர் இன்று காலை EDI விமான நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். டெல்டா நிறுவன அதிகாரிகள் தற்போதைய விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய விமான செய்தித் தொடர்பாளர் கூறினார். "விமானி மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டதை அடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு சட்டம் 2003ன் கீழ் அமைக்கப்பட்ட 0.02 என்ற சட்ட வரம்புக்கு மேல் அவரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு கண்டறியப்பட்டதை அடுத்து விமானி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, நியூயார்க்கிற்கான விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) வெளியிட்ட ஒரு அறிக்கையில், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டது. அதே நேரத்தில் மீதமுள்ள பயணிகளை அழைத்துச் சென்று புதிய விமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
குடிபோதையில் இருந்ததற்காக விமானிகள் கைது செய்யப்படுவது புதிய செய்தி அல்ல. 2019 ஆம் ஆண்டில், ரோஸ்மவுண்டில் இருந்து 38 வயதான டெல்டா ஏர்லைன்ஸ் விமானி, குடி போதையில் இருந்ததால் கைது செய்யப்பட்டார், பின்னர் குடிபோதையில் விமானத்தை இயக்கிய அல்லது இயக்க முயற்சித்ததற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டார். மினியாபோலிஸ் விமான நிலையத்தில் துப்பறியும் நபர்கள் விமானத்தில் அவரைக் கைது செய்தபோது விமானிக்கு இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.04 சதவீதம் முதல் 0.08 சதவீதம் வரை இருந்தது.
டெல்டா விமான நிறுவன விமானி 30 நாட்கள் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யபட்டார். 335 நாட்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதே போல் 2016 ஆம் ஆண்டு, யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் போதையில் இருந்ததற்காக கிளாஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு 10 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
டெல்டா ஏர்லைன்ஸ் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், டெல்டா ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு செய்தி தலைப்புச் செய்தியாக வருவது இது முதல் நிகழ்வு அல்ல. மார்ச் மாதம், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சியாட்டிலுக்கு டெல்டா விமானம் 1714 இல் பயணித்த ஒருவர், விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அவசர காலத்திற்கான விமானத்தின் கதவுகளில் ஒன்றைத் திறந்த நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | நடு வானில் கொட்டிய தேள்... ஏர் இந்தியா பயணிக்கு நேர்ந்த பயங்கர அனுபவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ