கர்நாடக சட்டமன்றத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்தவரை அம்மாநில துணை முதல்வராக அறிவித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, பின்பு அதில் வெற்றியும் கண்டு மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார் எடியூரப்பா. எனினும் அமைச்சரவை உண்டாக்குவதிலும், இலக்காக்களை ஒதுக்குவதிலும் தாமதம் காட்டி வருகின்றார். இந்நிலையில் தற்போது, கர்நாடகாவில் சாதியினரிடையே சமநிலையை ஏற்படுத்த 3 துணை முதல்வர்களை அறிவித்துள்ளார்.
இப்பட்டியலில், 2012-ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தனது கைப்பேசியில் ஆபாச படம் பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட லக்ஷ்மன் சவாடி இடம்பெற்றுள்ளார். அவர் இம்முறை எம்.எல்.ஏவோ, சட்டமன்ற சபை உறுப்பினரோ இல்லை, ஆயினும்கூட, துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தற்போது மாநிலத்தை ஒரு குழப்ப நிலையில் ஆழ்த்தியுள்ளது. கட்சித் தலைவர்கள் பலரும், துணை முதல்வர் பதவிக்கு மதிப்பிழந்த தலைவர் ஒருவரை தேர்ந்தெடுப்பதா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் சாதியினரிடையே சமநிலையை ஏற்படுத்த மாநிலத்தின் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மூன்று துணை முதல்வர்கள் பெயரை அறிவித்தார். லக்ஷ்மன் சவாடி, கோவிந்த் எம். கார்லோஜ், அஸ்வத் நாராயண் ஆகியோருக்கு இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் லக்ஷ்மன் சவாடி எந்த சபையிலும் உறுப்பினராக இல்லை. எனினும் அவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்திற்கு எதிராக பாஜக MLA ரேணுகாச்சார்யா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ரேணுகாச்சார்யா தெரிவிக்கையில், “தேர்தலில் தோற்றவருக்கு இவ்வளவு பெரிய பதவியை வழங்க வேண்டிய அவசியம் என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக., கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், சபையின் கேமிராக்கள் மூன்று அமைச்சர்கள் பக்கம் திரும்பின. பரபரப்பான விவாதங்களுக்கு இடையில் மூன்று MLA-க்களும் கைப்பேசியில் ஆர்வமாக இருக்க காரணம் என்ன? என உற்று பார்த்தனர். பின்னர் தான் ஆபாச படம் குறித்த தகவல்கள் வெளியானது. இந்த நிகழ்வினை அடுத்து, எதிர்க்கட்சிகளின் சலசலப்பு அதிகரித்தது. இதனையடுத்து மூன்று அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.