சமீப காலங்களில் தற்கொலைகளின் (Suicide) எண்ணிக்கை அதிகரித்துகொண்டு வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிறு தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கூட தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மனித மனம் நலிந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது. உத்திர பிரதேசத்திலிருந்து வந்துள்ள ஒரு செய்தி இது குறித்த அச்சத்தை அதிகரிப்பதோடு பல கேள்விகளையும் எழுப்புகிறது.
உத்திரபிரதேசத்தின் (UP) முஸஃபர்நகரிலிருந்து (Muzafarnagar) அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளி வந்துள்ளது. இங்கு ஜூன் 29 அன்று, சச்சின் மற்றும் நேஹாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு மணமகன் வீட்டிற்கு வந்த மணப்பெண் அடுத்த நாளே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அந்தப் பகுதி முழுவதும் தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணின் அறையில் இருந்த கண்ணாடியில் தற்கொலைக்கான குறிப்பு ஒன்றையும் காவல்துறை கண்டறிந்துள்ளது.
இந்த விவகாரம் குடேசரா கிராமத்தில் நடந்துள்ளது. சர்தாலா பகுதியைச் சேர்ந்த இந்த கிராமத்தில், சச்சின் சைனி டிவி பழுது பார்க்கும் கடையை வைத்திருந்தார். இவரது திருமணம் ஜூன் 29 அன்று ஷாம்லியின் (Shamli) ஜின்ஜானா தர்கத் நாகௌர் கிராமத்தை சேர்ந்த நேஹாவுடன் நடந்தது.
கொரோனா (Corona) நோய்த்தொற்றின் காரணமாக, இவர்களது திருமணத்திற்கு, மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜுன் 29 அன்று திருமணம் நடந்தது. ஜூன் 30 அன்று மணப்பெண் உட்பட மணமகன் வீட்டில் அனைவரும் அவர்களது வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்தவுடன் திருமணத்தின் மற்ற சடங்குகளும் நடத்தப்பட்டன.
ஜூலை 1 அன்று தனது காலில் வலி உள்ளதாக நேஹா வீட்டினரிடம் தெரிவித்தார். அதன் பிறகு அவர் தனது அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார். தனது அறைக்குள் சென்றவுடன் நேஹா தனது தந்தைக்கு ஃபோன் செய்ததாகவும், ஆனால் அதைப் பற்றி வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாதென்றும் கூறப்படுகிறது. நேஹா தன் தந்தையிடம் தன் கணவன் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.
அன்று மதியம் நேஹாவின் தந்தை நேஹாவின் புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். தன்னை நேஹா அழைத்ததாக அவர் கூறினார். நேஹா தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அவர்களுக்கு நேஹாவின் தந்தையின் கூற்று ஆச்சரியத்தை அளிக்கிறது. பின்னர் அனைவரும் நேஹாவை அழைத்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
ALSO READ: சிறைக்குள் பாதுகாப்பு! கைதிகளுக்கான பேனிக் அலாரம்!!
எவ்வளவு அடித்தும் கதவு திறக்கப்படாமல் போகவே, சச்சின் வீட்டினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியிலிருந்து நேஹாவின் சடலம் தொங்குவதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. தான் தன் விருப்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதாகவும், இதில் தன் புகுந்த வீட்டாருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் நேஹா அறையில் இருந்த கண்ணாடியில் அவர் எழுதி இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் மேலும் விசாரணை செய்து வருகிறது.
மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டிற்கு வந்த பெண் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன என்ற கேள்வியே அனைவரது மனங்களிலும் மேலோங்கி உள்ளது. குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் அனைவரின் தலையாய கடமையாகும். தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்ற கருத்து ஆழமாக அனைவரது மனங்களிலும் பதிக்கப்பட வேண்டும்.
ALSO READ: மியான்மாரில் மாணிக்க கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் பலி..!!!