மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென மன்சூர் அலிகான் உணர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோர, நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
Actor Mansoor Ali Khan lodges a defamation suit against Trisha, Kushiro & Chiranjeevi! pic.twitter.com/BQ700A4Ovs
— idlebrain.com (@idlebraindotcom) December 9, 2023
இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென கூறிய நீதிபதி, எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? எனவும் மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞரிடம் கூறினார். மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுவதாக கூறிய நீதிபதி, எதற்காக அவர் ஊடகங்களை சந்திக்கிறார்? அவருக்கு வேறு பணி இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலிகான், கைது நடவடிக்கைகளில் தப்பிப்பதற்காகவா? நிபந்தனை அற்ற மன்னிப்புக்கோரினார் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர், தனது பேச்சு தொடர்பான முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், தம்மை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை திரிஷா நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். நடிகை திரிஷா தரப்பில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில் இந்த விவகாரம் முடிந்து விட்டதாகவும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக உள்ள நிலையில் தற்போது எதற்கு அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மன்சூர் அலிகானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகைகள் திரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ