ராஞ்சி டெஸ்ட்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது

ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அத்துடன் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 26, 2024, 02:48 PM IST
  • ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் வின்
  • சுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் சிறப்பான பேட்டிங்
ராஞ்சி டெஸ்ட்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது title=

ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துருவ் ஜூரல் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முடிந்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து சுப்மன் கில் 52 ரன்களும், துருவ் ஜூரல் 39 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சோயிப் பஷீர் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மேலும் படிக்க | அரைசதம் அடித்ததும் சல்யூட் செய்யும் துருவ் ஜூரல்! பின்னால் இருக்கும் காரணம்!

போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சரிவில் இருந்தபோது 90 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவிய இளம் வீரர் துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய சொந்த மைதான ராஞ்சி கிரிக்கெட் மைதானத்திலேயே சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இப்போட்டியில் இன்றைய ஆட்டத்தை தொடங்கும்போது இந்திய அணி விக்கெட் ஏதும் இல்லாமல் தான் தொடங்கியது. ஆனால் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 37 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அடுத்து வந்த படிதார் ரன் ஏதும் இன்றியும், ஜடேஜா நான்கு ரன்களுக்கும், சர்பிராஸ்கான் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அந்த நேரத்தில் இங்கிலாந்து அணிக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. இன்னும் ஒரு விக்கெட் எடுத்திருந்தால் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்த சமயத்தில் சுப்மான் கில், துருவ் ஜூரலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் இந்திய அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் 200 ரன்களுக்கும் குறைவாக இந்திய மண்ணில் நிர்ணயிக்கப்பட்ட டெஸ்ட் போட்டி இலக்குகளில் இந்திய அணி ஒருபோதும் தோற்றதில்லை என்ற வரலாறு தொடர்கிறது. அதாவது இதுவரை 33 முறை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு 200 ரன்களுக்கும் குறைவாக வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்திய அணி 30 முறை வெற்றிகரமாக சேஸிங் செய்தும், 3 முறை டிரா செய்தும் இருக்கிறது. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு 150 ரன்களுக்கும் மேலாக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்வது இதுவே முதல் முறையாகும். 

அதேபோல் 17வது முறையாக இந்திய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது. பென் ஸ்டோக்ஸ், பிரெண்டன் மெக்கலம் ஆகியோர் தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் தோல்வி இதுவாகும். அத்துடன் இவர்களது கூட்டணியில் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்திப்பதும் இதுவே முதல் முறையாகும். இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7 ஆம் தேதி தொடங்குகிறது. 

மேலும் படிக்க | இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச சேசிங் செய்யப்பட்ட ரன்கள் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News