தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக முன்னாள் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ராமுலு அவர்களை நியமனம் செய்துள்ளார்கள்!
தற்போதைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எதிர் வரும் 27.05.2018 அன்று ஓய்வு பெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீதிபதி ராமுலு அவர்கள் ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவர் அரசியல் அமைப்பு சட்டம், பணியாளர் சட்டம், தொழிலாளர் சட்டங்கள், மத்திய சுங்கம் மற்றும் கலால் சட்டங்கள் மற்றும் போக்குவரத்து சட்டத்தில் அனுபவம் மிக்கவர். ஆளுநர் அவர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இவர் தேடுதல் குழுவின் தலைவராக செயல்படுவார்.
தேர்வு குழுவில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் ஊ.தங்கமுத்து, பல்கலைக்கழக பேரவை பிரதிநிதியாகவும், திரு.எஸ்.பி.இளங்கோவன், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தமிழக அரசின் பிரதிநிதியாக இருப்பார்கள். தேர்வுக் குழு காலியிடத்திற்கான அறிவிக்கையை செய்தித்தாள்களிலும் மற்றும் பல்கலைக்கழக வலைதளத்திலும் வெளியிட்டு அதிகப்படியான தேர்வர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய படிவத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை கவனமாக பரிசீலனை செய்து, அனைத்து தகுதிகளையும் நேரடியாக ஆராய்ந்து பத்து நபர்களுக்கு மிகாத வகையில் ஒரு பட்டியல் தயார் செய்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன் பிறகு தேடுதல்குழு மூன்று பேர் கொண்ட பட்டியலை தகுதிக்குரிய விளக்கங்களுடன் ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக ஆளுநரின் செய்திக் குறிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது!