தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள திமுக, தேர்தல் ஆணையத்தை இது தொடர்பாக நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
பின்னர் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று நடைப்பெற்ற திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இன்று திமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...
"17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும், காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் (10.3.2019)அறிவித்திருப்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வரவேற்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை மட்டும் தள்ளி வைத்திருப்பது மிகுந்த உள்நோக்கம் நிறைந்த ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கை என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வேதனையுடன் தனது கருத்தைப் பதிவு செய்கிறது.
“வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூன்று தொகுதி இடைத் தேர்தல்களை நடத்தவில்லை” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமோ, ஆதாரமோ, அடிப்படையோ இல்லை என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது. குறிப்பாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு - அந்த தகுதி நீக்கம் ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறுதிக்கு வந்துவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வேறு தேர்தல் வழக்குகளில் “தேர்தலை நடத்தக் கூடாது என்று எவ்வித தடையுத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கப்படவில்லை” என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் வழக்கிலும் அவ்வாறு தடையுத்தரவு ஏதும் இல்லை. ஆகவே இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான வாக்காளர் விரோத நடவடிக்கை. அரவக்குறிச்சியும், ஒட்டப்பிடாரமும் ஏறக்குறைய 18 மாதங்களுக்கு மேலும்,திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி எட்டு மாதங்களுக்கு மேலாகவும் காலியாக உள்ளது. அத்தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல் தொடர்ந்து வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதும், சட்டமன்றத் தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டே ஒரு ஆட்சியை “மைனாரிட்டி” அந்தஸ்தில் தொடர அனுமதிப்பதும் ஆரோக்கியமான ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ற செயலும் அல்ல - அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட செயலும் அல்ல!
ஆகவே அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.கழகம் நேரில் வலியுறுத்தும். அதற்கேற்றவாறு தேர்தல் நடத்த முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த மூன்று தொகுதிகளின் தேர்தலையும் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இக்கூட்டம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது."