சென்னை: அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி காலை 11.30 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார்.
கவர்னரை, எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் சந்திக்க உள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை கவர்னரை எடப்பாடி சந்தித்துள்ள நிலையில், இன்று மீண்டும் சந்திப்பு நடைபெற உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்து 4 ஆண்டு சிறை தண்டனையையும் ரூ10 கோடி அபராதத்தையும் விதித்தது. இதனால் சசிகலா அடுத்த 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது நிலை ஏற்பட்டது..
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். இதுபற்றி ஆளுநருக்கு கடிதமும் அனுப்பப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட மொத்தம் 12 பேரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தது தொடர்பான கடிதத்துடன், தனக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னரிடம் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று மீண்டும் ஆளுநரிடம் இருந்து பழனிச்சாமிக்கு அழைப்பு வந்ததுள்ளது. 24 மணி நேரத்திற்குள் யார் ஆட்சி அமைப்பது என்பதை குறித்து முடிவு எடுப்பதாக தெரிகிறது.