இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும்: MKS

இடஒதுக்கீட்டின் மீதான BJP அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது என முக.ஸ்டாலின் காட்டம்..!

Last Updated : Jul 25, 2020, 01:58 PM IST
இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும்: MKS title=

இடஒதுக்கீட்டின் மீதான BJP அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது என முக.ஸ்டாலின் காட்டம்..!

இடஒதுக்கீட்டின் மீதான பாஜக அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது; கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தி - க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "நீண்ட நெடுங்காலமாக இடையறாது போராடி, பிரதமராக 'சமூக நீதிக் காவலர்' வி.பி. சிங் அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு பெறப்பட்ட, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீட்டில் 50 சதவீதத்தைக் கூட நிரப்பாமல் வஞ்சித்து - மருத்துவக் கல்வியில் அறவே நிராகரித்து - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின்கீழான அடிப்படை உரிமையை 'விதவிதமாக' பாழ்படுத்திவரும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 'க்ரீமிலேயர்' வருமான வரம்பிற்கு 'நிகர சம்பளத்தை' கணக்கில் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள்; இடஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டி கொண்டு பாய்ச்சுவது போல் இருக்கிறது.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அடியோடு புறக்கணிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு 'மண்டல் கமிஷன்' அளித்த பரிந்துரை - எதிர்கால முன்னேற்றத்திற்கான திறவுகோலாகவும், உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீட்டை உறுதிசெய்து கொடுத்த தீர்ப்பு, இருளைப் போக்கும் ஒளிக் கதிராகவும் அமைந்தது. ஆனால், அதில் 'க்ரீமிலேயர்' என்று ஒரு 'தடைக்கல்லை' ஏற்படுத்தி - இடஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை விலக்கி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதனை முற்றாகவே நீக்க வேண்டும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.

ALSO READ | கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

1993-ல் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட க்ரீமிலேயருக்கு கணக்கிடப்படும் வருமான வரம்பு, கடந்த 27 ஆண்டுகளில் 9 முறை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், 1993-ல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அலுவலகக் குறிப்பாணையில் (Office Memorandum) “மூன்று வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்பட்டால் மூன்று வருடத்திற்கும் குறைவாகவே கூட க்ரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டும், இதுவரை நான்கு முறை மட்டுமே க்ரீமிலேயருக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது; பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் அநீதி ஆகும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015-ம் ஆண்டிலேயே “க்ரீமிலேயர் வருமான வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்” என்று தெளிவான பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் சமுதாய நலனுக்கான நாடாளுமன்றக் குழு “க்ரீமிலேயர் வருமான வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்” என்று ஒருமனதாகப் பரிந்துரை அளித்துள்ளது.

ஆனால் இவை எதையும் கண்டு கொள்ளாமல் - 'பெயரளவுக்கு' 6 லட்சமாக இருந்த க்ரீமிலேயர் வருமான வரம்பை 8 லட்சமாக மட்டுமே உயர்த்தி - பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, 27 சதவீத இடஒதுக்கீடு பயனை முழுவதும் அனுபவிக்க விடாமல் மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுத் தடுத்தது. இந்தத் துரோகம் போதாது என்று, முதலில் "சம்பளத்தை க்ரீமிலேயர் வருமானமாக எடுத்துக் கொள்வோம்” என்று; ஆணையத்தில் பா.ஜ.க.,வினரை தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நிரப்பி, ஒப்புதலைப் பெற்று; இப்போது “நிகர சம்பளத்தை எடுத்துக் கொண்டு க்ரீமிலேயர் வருமானத்தைக் கணக்கிடுவோம்” என்று துடிப்பது, சமூகநீதிக்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது; நாட்டின் போர்முனைக்கு முதலில் தடந்தோள் தட்டிப் புறப்படும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்குத் துரோகம் இழைப்பது!

ALSO READ | Online Rummy விளையாட்டுக்கு தடை செய்ய வேண்டும்: மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

“க்ரீமிலேயர், 27 சதவீத இடஒதுக்கீட்டின் பயனை அடைவதற்குத் தடையாக இருக்கிறது” என்று மத்திய அரசுக்கு 2015-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெளிவாகப் பரிந்துரை வழங்கிய போதிலும் - சட்டபூர்வமான இடஒதுக்கீட்டின் மீது மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை - தமிழகத்தில் மட்டுமின்றி; நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது என்று முன்கூட்டியே தெரிவித்திட விரும்புகிறேன்.

ஆகவே, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திடவும்; பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Trending News