ஒன்று மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதத்தை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது எனவும் வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என னிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை!
கற்பிக்கப்படும் பாடங்கள், புத்தகப் பையின் எடை ஆகியவை அரசின் அறிவுறுத்தல்படி இருப்பதை ஒழுங்குபடுத்த வழிகாட்டு நெறிகளை உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பையின் எடை ஒன்றரைக் கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில், பள்ளி மாணவர்கள் பலர், தங்களது உடல் எடையில், 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், பள்ளி மாணவர்களின் புத்தகப்பை, எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-
- 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையின் எடை, 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தகப்பையின் எடை, 2 முதல் 3 கிலோ வரை இருக்கலாம்.
- 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் புத்தகப்பை எடை 4 கிலோவிற்கு மிகாமலும், எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 4.5 கிலோவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- 10 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையின் எடை 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதத்தை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது எனவும் வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல், கணிதம் ஆகியவற்றை மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் எனவும் மாணவர்களை, பாடப்புத்தகங்களை தவிர வேறு எதையும் கொண்டு வர சொல்லக்கூடாது எனவும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.