ஜல்லிக்கட்டு: இரவு முழுவதும் தொடர்ந்த போராட்டம்

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Last Updated : Jan 18, 2017, 08:42 AM IST
ஜல்லிக்கட்டு: இரவு முழுவதும் தொடர்ந்த போராட்டம் title=

சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 39 மணி நேரத்திற்கு மேலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். 

மெரினா கடற்கையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு கூட்டம் அதிகரித்து வருவதால் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 

அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. அவர்களை கலைந்து செல்ல போலீசார் தொடர்ந்து வலியுறுத்தினர். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, மதுரை அலங்காநல்லூரில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் நேற்று 5-வது நாளாக பாலமேடு, அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மதுரை சாலை, வாடிப்பட்டி, பாலமேடு, சத்திரபட்டி, உள்ளிட்ட அலங்காநல்லூர் இணைப்பு சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொட்டும் பனியிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இரவு முழுவதும் போராடி வருவதும் பெரும் தன்னெழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அலங்காநல்லூரில் மறியல் நடந்த இடத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி, கருணாஸ், திரைப்பட இயக்குனர் சீமான், அமீர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஜல்லிக்கட்டை நடத்த மத்திய-மாநில அரசுகளிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இன்று போராட்டமானது மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News