தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதலாக 12 சதவீதம் வடகிழக்கு பருவமழை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராயநகர், வடபழனி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதேபோல், கடலூர், ரெட்டிசாவடி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, புதுசத்திரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.