தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...!
தென்மேற்கு பருவமழையானது வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அதிகளவில் பெய்து வருகிறது.
சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது. தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதனால் வடதமிழகம்- தென் தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும்.
தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழைபெய்து வருகிறது. இங்கு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் வருகிற 26-ந்தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றமும் அதிகம் காணப்படும்.