அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது. இரு அணி இணைப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் அதிமுக பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இரண்டரை மாத கால இடைவெளிக்கு பிறகு, 2 அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது..
அதிமுக-வை ஒன்று இணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அணியினரும் (அ.தி.மு.க. அம்மா), ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் (அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா) இறங்கினர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் வைக்கப்பட்டது.
நேற்று (செவாய்க்கிழமை) ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் ஏற்பட்ட துயரம் தமிழக மக்களின் இதயத்தைவிட்டு இன்றும் அகலவில்லை. அவரது மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின் குரல்தான், தமிழக மக்களின் குரல்தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்மயுத்தத்தின் குரல்.விசுவாசத் தொண்டர்களின், தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அந்த தர்மயுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் வலியுறுத்தலை அடுத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது. இரு அணி இணைப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை என அ.தி.மு.க வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.