கடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கிட்டத்தட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கி அடுத்த நான்கு மணி நேரத்தில் யார் ஆட்சி அமைக்க போகிறார் என முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு ஜெயநகர் தொகுதி மற்றும் ஆர்.ஆர். நகர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதை அடுத்து, நடந்து முடிந்த 222 தொகுதிகளுக்கான தேர்தலில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2013-ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட அதிகம்.
கர்நாடகா மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில், 283 அரங்குகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவியதால், கர்நாடகவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இன்றைய தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள்.