மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ!

Pre Poll Survey: வரும் மக்களவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2024, 05:23 PM IST
  • மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 19ஆம் தேதி நடக்கிறது.
  • ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
  • 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ! title=

Pre Poll Survey Lok Sabha Election 2024: நாடு முழுவதும் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. 18ஆவது மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தேசிய அளவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்குமா அல்லது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என எதிர்பார்ப்பு நாடு முழுவதும் உள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியிட்டது. அன்றிலிருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மட்டுமின்றி அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலும், 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு

அந்த வகையில், முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப். 19ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, வாக்குப்பதிவுக்கு பின்னான தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி வரும் ஏப். 19ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி இரவு வரை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னான கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது.

மேலும் படிக்க | காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது.. 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை -பிரதமர் மோடி

இந்நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில் லோக்நிதி - வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் (Lokniti-Centre for the Study of Developing Societies - CSDS) நடத்திய வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு தகவல்களும் வெளியாகி உள்ளன. 

பாஜக முன்னிலை...

வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியை (INDIA Alliance) விட, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA Alliance) 12% வாக்கு வித்தியாசத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என இந்த ஆய்வின் முடிவில் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, நாட்டில் 10 வாக்காளர்களில் நான்கு பேர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்த ஆய்வு முடிவில் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் சற்று முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், ஆனால் பாஜகவை அச்சுறுத்தும் அளவிற்கு இல்லை என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

பிரதமர் மோடியின் செல்வாக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கை அளிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னைகளும் இந்த தேர்தலில் அதிக கவனத்தை பெறும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவை மீதான அதிருப்தியும் சமூகத்தில் எதிரொலிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்

இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்படி, 47% பேர் பிரதமராக நரேந்திர மோடியே தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு 27% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | 'நடப்பது தத்துவ போர்... ஜெயிக்கப்போவது இந்தியா கூட்டணி' - நெல்லையில் ராகுல் காந்தி கர்ஜனை!

மேலும், ராகுல் காந்தியின் உத்தரவாதத்தை விட நரேந்திர மோடியின் உத்தரவாதம் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது எனலாம். அதாவது, 56% பேர் பிரதமர் மோடியின் வாக்குறுதியின் மிகுதியாகவோ அல்லது ஓரளவுக்கோ நம்புவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், ராகுல் காந்தியின் உத்தரவாதங்களை நம்புவதாக 49% வாக்களித்துள்ளனர். குறிப்பாக, செல்வந்தர்கள் பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் மேல் அதிக நம்பிக்கையை கொண்டுள்ளனர். நடுத்தர மக்கள் இருவரின் வாக்குறுதிகள் மீது சமமான அளவில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தேர்தலில் ராமர் கோவிலின் தாக்கம்

அதுமட்டுமின்றி, 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி திருப்திகரமாக இருந்ததாகவும், மேற்கொண்டு 5 ஆண்டுகள் அவர்களிடம் ஆட்சியை கொடுத்து வாய்ப்பளிக்கலாம் என நம்புவதாகவும் ஆய்வில் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு என்பது வாக்காளர்கள் மத்தியில் குறிப்பாக என்டிஏ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோயிலை கட்டியதுதான் பிரதமர் மோடியின் மிகவும் பிடித்தமான நடவடிக்கை என ஆய்வில் மூன்றில் ஒருவர் கூறியிருக்கின்றனர்.

வீழ்ச்சியடைந்த பாஜகவின் ஆதரவு

இருப்பினும், கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட நரேந்திர மோடியின் ஆட்சியின் மீதான ஆதரவு சதவீதம் என்பது குறைந்திருக்கிறது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதாவது, நரேந்திர மோடி மீதான ஆட்சி குறித்து 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 67 சதவீதம் பேர் மோடியின் ஆட்சி முழுவதுமாகவோ அல்லது ஓரளவுக்கோ திருப்தி அளிப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால், 2024ஆம் ஆண்டில் 57% பேர் மட்டும் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர், இதனால் மோடியின் ஆட்சி மீதான ஆதரவு சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளனது எனலாம்.

அதிகரித்த பாஜகவின் எதிர்ப்பு 

ஆதரவு குறைந்திருப்பதை போல் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த 2019இல் மோடியின் ஆட்சி மீது முழுவதும் அதிருப்தி அல்லது ஓரளவு அதிருப்தி என 30 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில், இந்த முறை 39 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதன்மூலம், எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களையும், மேற்கு மாநிலங்களையும் ஒப்பிடும்போது தெற்கில் எதிர்ப்பு அதிகம் உள்ளது. 

ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில், பாஜக பெரும்பான்மையுடன் 2024இல் ஆட்சியமைக்கும் என இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக்கணிப்பு 19 மாநிலங்கள் முழுவதும் 10,019 மக்களிடைய நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அமேதி மக்களின் விசுவாசத்தை சந்தேகிக்கிறார் ராகுல் காந்தி: ஸ்மிருதி இரானி காட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News