உலகக் கோப்பையில் சீன்கள் மாறுது... அரையிறுதியில் காலடி வைக்கப்போவது யார் யார்?

ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கையை நேற்று ஆப்கானிஸ்தான் வீழ்த்திய நிலையில், உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகளுக்கு இப்போது அரையிறுதிக்கு நுழைய வாய்ப்புள்ளது என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 31, 2023, 11:21 AM IST
  • இந்திய அணி மட்டுமே இதுவரை அரையிறுதியை உறுதி செய்துள்ளது எனலாம்.
  • இருப்பினும், இலங்கை அணியுடன் வென்றால் அது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிடும்.
  • பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிசயம் அற்புதம் நடக்க காத்திருக்கிறது.
உலகக் கோப்பையில் சீன்கள் மாறுது... அரையிறுதியில் காலடி வைக்கப்போவது யார் யார்? title=

ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை (ஆப்கானிஸ்தான் - இலங்கை போட்டி வரை) அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடிவிட்டன. இதில் இந்தியா அணி (Team India) மட்டுமே தோல்வியடையாமல் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி ஒருமுறை தோல்வியை தழுவி உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 தோல்விகளுடன் முறையே 3ஆவது, 4ஆவது இடத்தில் உள்ளனர். 

இந்த உலகக் கோப்பையின் சுவாரஸ்யமே ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் எழுச்சிதான். ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என மூன்று சாம்பியன் அணிகளை வென்று கெத்து காட்டியிருக்கிறது என்றால் நெதர்லாந்து அணி பலமிக்க தென்னாப்பிரிக்காவையும், பல அணிகளுக்கு உலகக் கோப்பையில் அப்செட் தந்த வங்கதேசத்தையும் அப்செட் செய்திருக்கிறது. 

புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியுடனான போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதால் அரையிறுதி வாய்ப்பு என்பது அந்த அணிக்கு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆப்கன் அணிக்கு மட்டுமின்றி பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு சிறிதாக உள்ளது. வங்கதேசம், இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பே இல்லை எனலாம். 

மேலும் படிக்க | உலகக் கோப்பையை விடுங்க... இந்த அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல் - முழு விவரம் இதோ!

அந்த வகையில், இந்தியாவை தவிர தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அணி வாரியாக இங்கு தனித்தனியாக காணலாம். 

தென்னாப்பிரிக்கா 

தென்னாப்பிரிக்காவுக்கு (South Africa National Cricket Team) இன்னும் நியூசிலாந்து (நவ. 1), இந்தியா (நவ. 4), ஆப்கானிஸ்தான் (நவ. 10) என அரையிறுதிக்கு போட்டியிடும் அணிகளுடன் ஆட்டங்கள் உள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு நெட் ரன்ரேட் இந்தியா உள்பட மற்ற அணிகளை விட மிக அதிகமாக இருப்பது பெரிய அனுகூலம் எனலாம். இருப்பினும், அடுத்து வரும் 3 போட்டிகளில் 2இல் வென்றால் அரையிறுதி வாய்பபை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். 

நியூசிலாந்து

கடந்த முறை நூலிழையில் உலகக் கோப்பையை தவறவிட்ட நியூசிலாந்து (New Zealand National Cricket Team) இம்முறை அதனை முத்தமிட்டே ஆக வேண்டும் என களமிறங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது. அதன் அடுத்தடுத்த போட்டிகள் தென்னாப்பிரிக்கா (நவ. 1), பாகிஸ்தான் (நவ. 1), இலங்கை (நவ. 9) ஆகிய அணிகளுடன் உள்ளதால், இதில் இரண்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி இடத்தை உறுதி செய்ய முடியும். 

ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலியா (Australia National Cricket Team) முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை கண்டாலும், அடுத்தடுத்து நான்கு வெற்றியை குவித்து நான்காவது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளை போலவே இந்த அணியும் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெளியாக வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து (நவ. 4), ஆப்கானிஸ்தான் (நவ. 7), வங்கதேசம் (நவ. 11) உள்ளிட்ட அணிகளுடன் போட்டி உள்ளது.

மேலும் படிக்க | டி20-க்கு கொடுக்கும் முக்கியத்துவம் ODI-க்கு இல்லையா?

ஆப்கானிஸ்தான்

கத்துக்குட்டி என்று தன்மீது இருந்த பெயரை மொத்தமாக தூக்கிவிட்டது ஆப்கானிஸ்தான் (Afghanistan National Cricket Team). நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை அந்த அணி வீழ்த்தி உள்ளது. இன்னும் அந்த அணிக்கு நெதர்லாந்து (நவ. 3), ஆஸ்திரேலியா (நவ. 7), தென்னாப்பிரிக்கா (நவ. 10) ஆகிய அணிகளுடன் போட்டி உள்ளது. இதில் மூன்றிலுமே நல்ல ரன்ரேட்டில் ஜெயித்தால் ஆப்கன் நிச்சயம் அரையிறுதிக்கு தகுதிபெறும். 

இலங்கை

இலங்கை அணி (Srilanka National Cricket Team) இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இனி இந்தியா (நவ. 2), வங்கதேசம் (நவ. 6), நியூசிலாந்து (நவ. 9) ஆகிய அணிகளுடன்  மோத உள்ளது. இதில் அனைத்திலும் வெற்றிபெற்று, நல்ல ரன்ரேட்டை பெற்றால் அரையிறுதி வாய்ப்புள்ளது. ஆனால், சற்று கடினம்தான். 

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியும் (Pakistan National Cricket Team) இலங்கையை போன்றுதான். அடுத்து அந்த அணிக்கு வங்கதேசம் (இன்று - அக். 31), நியூசிலாந்து (நவ. 4), இங்கிலாந்து (நவ. 11) ஆகிய அணிகளுடன் போட்டி உள்ளது. இதில் மூன்றிலும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்று, மற்ற போட்டிகளின் வெற்றி - தோல்வி ஆகியவை மூலம்தான் அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும். இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அதிசயம், அற்புதத்திற்கு காத்திருக்கின்றனர் எனலாம். 

நெதர்லாந்து

நெதர்லாந்து அணி (Netherlands National Cricket Team) தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகளை வீழ்த்தி அப்செட் கொடுத்திருப்பதால் இதன் அரையிறுதி வாய்ப்பையும் நாம் நிராகரிக்க முடியாது. இந்த அணியும் அடுத்துள்ள ஆப்கானிஸ்தான் (நவ. 3), இங்கிலாந்து (நவ. 8), இந்தியா (நவ. 12) போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற வேண்டும். 

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தால்... இவரை வெளியே வையுங்க... இந்தியாவின் வெற்றிநடை தொடரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News