ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Erode East Bypolls Fight: காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

Written by - K.Nagappan | Edited by - Shiva Murugesan | Last Updated : Jan 24, 2023, 05:31 PM IST
  • ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள்.
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்பாக மாறி வருகிறது.
  • பாஜகவின் நகர்வு இந்த இடைத்தேர்தல் மூலம் வெளிச்சத்துக்கு வரும்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?  title=

Erode East Byelection: ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். இதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது. 

பரபரப்பாக மாறிய அரசியல் களம்

ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் கிழக்குத் தொகுதியில் இருக்கின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேர் மற்றும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 23 வாக்காளர்கள், ராணுவ வாக்காளர்கள் 22  பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இந்த இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்? பாதகம்?

1) பொதுவாகவே இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி. ஆனாலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, இன்றுவரை நிறைவேற்றாமல் இருக்கும் மகளிருக்கான உரிமைத் தொகை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி நேரடியாக களமிறங்கி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணித்துள்ளனர் எடப்பாடி தரப்பு. அதேநேரத்தில் காங்கிரஸில் நிலவும் கோஷ்டிப் பூசல், அவர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்க்கத் தயாராக இருக்கும் லோக்கல் தி.மு.கவினர் எனத் தங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும் என்று அதிமுக முகாமில் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆளும் திமுகவுக்கு பாதகமாக இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க: ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழ்தான் - ஜோசியம் சொல்லும் ஜெயக்குமார்

2)  2021 சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பாக தமாகாவுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. எம்.யுவராஜா போட்டியிட்டு 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று, அதாவது 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட யுவராஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூட்டணி தர்மப்படி தமாகா உடன் பேசி, அதிமுக போட்டியிட ஒருமனதாக முடிவு எட்டப்பட்டது. ஏனெனில் இது ஈபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலத்துக்கான முழு அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது. கட்சியும், தலைமையும் நானே என்ற ஈபிஎஸ்ஸின் முழக்கம் பெரிய அளவில் ஓங்கி ஒலிக்க இது உதவும் என்பதால் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

3) இந்த நிலையில், "எங்கள் தரப்பிலிருந்தும் வேட்பாளரை இறக்குவோம்" என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது, தி.மு.க கூட்டணிக்குச் சாதகமான சூழ்நிலையை தற்போது ஏற்படுத்தியிருப்பதாகப் பரபரக்கப்படுகிறது. அ.தி.மு.க-வில் இருக்கும் உட்கட்சிப் பிரச்சினை, இரட்டை இலைச் சின்ன பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகளுக்குமான தீர்வாக இந்த இடைத்தேர்தலை எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் பார்க்கின்றன. எனவே, இரண்டு தரப்புக்கும் இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியுடன் போட்டியிடுவதைத் தாண்டி ஒரே கட்சியைச் சேர்ந்த இரு அணிகள் இடைத்தேர்தலைச் சந்திப்பதாக மாறி மாறிக் கூறுவது அதிமுகவுக்கு பாதகமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், ஓர் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி அல்லது பல முனைப் போட்டி ஏற்பட்டால், அது ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும். அதிமுக கட்சியில் தன்னுடைய இடத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், கட்சியின் அதிகாரத்தைத் தனதாக்கிக்கொள்ளவும் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்-ஸுக்கும் முட்டல் மோதல் தொடர்கிறது. இது ஆளும் கட்சிக்கே சாதகமாக அமைந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

4) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனே எனக்கு 74 வயதாகிவிட்டது. உடல் நலனும் சரியில்லை. பல உடல் நலப் பிரச்சினைகள் இருப்பதால் நான் நிற்கவில்லை. என் இரண்டாவது மகனுக்கு வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்ட நிலையில், தற்போது அவரே களத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். மிகவும் பரிச்சியமான ஒரு முகம், துணிச்சலான, அதிரடி பேச்சுக்கு சொந்தக்காரர் என்பதால் வெற்றி வாய்ப்பு உறுதி என ஈவிகேஎஸ்ஸை வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர். இது தங்கள் அணி வெற்றி பெறுவதற்காக திமுக கையாளும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. தி.மு.க ஆட்சி அமைத்து 20 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இடைத்தேர்தலில் பெறும் வெற்றியை, ‘இந்த ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு’ என ஆளும் தரப்பு பறைசாற்றிக்கொள்ளும்.

மேலும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தல்: பல்டி அடித்த பாமக..ஷாக்கில் எடப்பாடி பழனிச்சாமி டீம்

5) கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.கவும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. பாஜக இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. பா.ஜ.க போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிலும் ஒருங்கிணைந்த அதிமுக சாத்தியமாகும் போதுதான் பாஜக ஆதரவு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.  அதிமுகவில் நடக்கும் குளறுபடிகளை பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் பாஜகவின் நகர்வு என்ன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இந்த இடைத்தேர்தல் மூலம் வெளிச்சத்துக்கு வரும்.

மேலும் படிக்க:  கமல்ஹாசன் ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

6) கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பா.ம.க., "தேர்தலில் போட்டியிடப்போவதுமில்லை. யாருக்கும் ஆதரவுமில்லை" எனக் கூறிவிட்டது. தேமுதிக தனித்துக் களம் காண்கிறது. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ள நிலையில், பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதுகுறித்து வரும் 29 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். அமமுக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தினகரனே கூட போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஈவிகேஎஸ் இளங்கோவன் கமல்ஹாசனைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். கமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். எனவே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்பாக மாறி வருகிறது. 

ஆறு முனைப் போட்டி?

காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இது 5 முனைப் போட்டியாக அமையுமா அல்லது அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட்டால் ஆறு முனைப் போட்டியாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

மேலும் படிக்க: களம் தயார்! ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News