ஊடகங்கள் கடமை உணர்ந்து பங்காற்ற வேண்டும் என PMK கோரிக்கை!

ஊடகங்கள்  கடமை உணர்ந்து பங்காற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!

Last Updated : Aug 25, 2019, 10:52 AM IST
ஊடகங்கள்  கடமை உணர்ந்து பங்காற்ற வேண்டும் என PMK கோரிக்கை! title=

காலநிலை நெருக்கடி நிலை: ஊடகங்கள்  கடமை உணர்ந்து பங்காற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வூட்டும் செய்திகளை அதிக அளவில் வெளியிடுவதென அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்கள் தீர்மானித்துள்ளன. மிகப்பெரிய ஆபத்திலிருந்து பூமியையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பன்னாட்டு அமைப்புகள் போராடி வரும் நிலையில், அதில் ஊடகங்களும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

புவி வெப்பமயமாதல் என்றால் என்ன? அதன் தீயவிளைவுகள் என்னென்ன? அவை மனிதகுலத்தை எவ்வாறு பாதிக்கும்? அந்த தீயவிளைவுகளை தடுக்க தனிநபர்கள் முதல் அரசு வரை மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து பல்வேறு அறிக்கைகளில் விரிவாக விளக்கியுள்ளேன். இதுபற்றி எனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். இந்த உண்மைகளையும், தகவல்களையும் ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தால், அது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகளை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். எனினும், இப்பணியில்  உலகின் பெரும்பாலான ஊடகங்கள் தங்களின் கடமையை தட்டிக்கழித்து வந்தன. ஆனாலும்,  சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட சில ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக புவிவெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வூட்ட பன்னாட்டு ஊடகங்கள் முன்வந்திருக்கின்றன.

லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் இதழுடன் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் தி நேஷன், கொலம்பியா ஜர்னலிசம் ரிவியூ ஆகிய இதழ்கள் இணைந்து புவிவெப்பமயமாதல் குறித்த செய்திகளை அதிக அளவில் வெளியிடுவதற்காக ‘‘காலநிலை மாற்றம் குறித்த செய்திகளை வெளியிடுதல் (Covering Climate Now)’’ என்ற தலைப்பில் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 அச்சு மற்றும் ஆன்லைன் இதழ்கள், 20 வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள், நிறுவனம் சாராத பத்திரிகையாளர்கள் 12 பேர், 4 நிறுவனங்கள் என மொத்தம் 86 ஊடக அமைப்புகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து மக்கள் தொகைக்காட்சி இந்த திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்திருக்கிறது.

நியூயார்க்கில் செப்டம்பர் 23-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற செயல்திட்ட உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும் அம்சங்கள் பற்றி செப்டம்பர் 16 முதல் 23 வரை  விரிவாக செய்தி வெளியிட இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. புவி வெப்பமயமாதல் குறித்து வெளியிடப்படும் செய்திகளின் அளவையும், தரத்தையும் அதிகரிப்பது, காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்துவது, காலநிலை நெருக்கடி நிலையை உடனடியாக பிரகடனம் செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது என்று இந்த பன்னாட்டு செய்தி நிறுவனங்களும் செய்தியாளர்களும் தீர்மானித்துள்ளனர்.

பன்னாட்டு ஊடகங்களின் இந்நிலைப்பாடு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கதும் ஆகும். அதேநேரத்தில் தமிழ்நாட்டு ஊடகங்கள் இந்த விஷயத்தில் எத்தகைய பங்காற்றப் போகின்றன என்பது தான் மில்லியன் டாலர் வினா ஆகும். புவி வெப்பமயமாதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த உலகமும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்களும், ஊடகங்களும் தங்களின் கடமையை செய்யாமல் விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒருவேளை மக்களும், தொண்டு நிறுவனங்களும் இவ்விஷயத்தில் எதையும் செய்யாமல் இருந்தால் கூட, காலநிலை நெருக்கடி நிலை குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி களத்துக்கு அழைத்து வர வேண்டியது  ஊடகங்களின் கடமை ஆகும். ஆனால், காலநிலை நெருக்கடி நிலையை மத்திய, மாநில அரசுகள் முதல் உள்ளாட்சிகள் வரை அனைத்து அமைப்புகளும் பிரகடனம் செய்து செயல்படுத்த வேண்டும்  என்று வலியுறுத்தி பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சென்னையில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற  நிகழ்ச்சி குறித்து சில ஊடகங்கள் மட்டும் செய்தி வெளியிட்ட நிலையில், பெரும்பான்மையான காட்சி ஊடகங்கள் அதை கண்டுகொள்ளக்கூட இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை ஆகும்.

உண்மையில் காலநிலை நெருக்கடி நிலை குறித்து  மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டும் பணியை  ஊடகங்கள் தான் கைகளில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஊடகங்களின் பரபரப்பு செய்தித்தேடலில் பயனுள்ள செய்திகள் பலியாகிப் போவது தான் வேதனையளிக்கிறது. ஊடகங்கள் பரபரப்புக்காகவும், நேயர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் செய்திகளை வெளியிடுவது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால், இவற்றைக் கடந்து ஒவ்வொரு ஊடகமும் ஆத்ம திருப்திக்காக செய்திகளை வெளியிட வேண்டியது அவசியமாகும். அத்தகைய ஆத்மதிருப்தி  வழங்கும் செய்திகளாக திகழ்வது காலநிலை நெருக்கடி நிலை குறித்த செய்திகள் தான். இத்தகைய செய்திகளை அதிக அளவில் வழங்குவதுடன், இதுகுறித்த விவாதங்களையும் அதிக அளவில் நிகழ்த்த தமிழ்நாட்டு காட்சி ஊடகங்கள் முன்வர வேண்டும். இதற்காக தமிழக ஊடகங்களுக்கு வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் உதவிகளை செய்வதற்கு பசுமைத்தாயகம்  தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Trending News