பக்ஸர்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீயாய் பரவி வருகிறது. அரசாங்கம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல விதங்களில் முயற்சி செய்து வருகிறது. எனினும், பெரிதாக நிவாரணம் கிடைத்ததாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ளூர்வாசிகள் திங்களன்று பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். கங்கைக் கரையில் சிதைந்த மற்றும் வீங்கிய நிலையில் கரை ஒதுங்கிய சடலங்களைக் கண்டு அவர்கள் பீதி அடைந்தனர்.
சவுசா கிராமத்தில் கங்கை ஆற்றின் (River Ganga) கரையில் உள்ள மகாதேவ் காட்டில் 150 க்கும் மேற்பட்ட சடலங்கள் கிடந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர். இவை நதியில் கீழ்நோக்கி நகர்ந்து இந்த காட்டில் ஒதுங்கியிருக்கின்றன என்று மக்கள் கூறுகிறார்கள். இந்த சடலங்களை இங்கு நாய்களும் பிற விலங்குகளும் சீண்டும் ஆபத்து உள்ளதால், இதனால் COVID-19 தொற்றுநோய் மேலும் பரவ அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றது.
கரை ஒதுங்கிய சடலங்கள் கோவிட் நோயாளிகளின் சடலங்களாக இருக்கும் என அச்சம் உள்ளது. மாவட்டத்தின் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால், உத்தர பிரதேசத்திலிருந்தோ, மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தோ இந்த சடலங்கள் கங்கை நதியில் வீசப்பட்டிருக்கலாம் என சந்த்தேகிக்கப்படுகின்றது.
கரையில் ஒதுங்கி மிதந்துக்கொண்டிருந்த ஏராளமான சடலங்களைப் பார்த்த கிராம மக்களுக்கு ஆச்சரியமும் அச்சமும் ஒன்று சேர ஏற்பட்டது.
சடலங்கள் உத்தர பிரதேசத்திலிருந்து வந்திருக்கலாம் என்று பக்சர் நிர்வாக அதிகாரிகள் நம்புகின்றனர். இருப்பினும், கங்கைக் கரையில் அமைந்துள்ள பிற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சடலங்களை ஆற்றில் வீசியதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
இறுதிச் சடங்குகளுக்கு அதிக செலவு ஆவதால் சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டதாக பிற தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களாக இவை இருக்கும் என்றும், இவற்றின் அடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டதால், இவை கங்கையில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.
"ஆற்றில் மிதக்கும் உடல்கள் கோவிட் -19 (COVID-19) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள். நான் காலையிலிருந்து 35-40 உடல்களைக் கண்டு விட்டேன். சில உடல்கள் அப்படியே வீசப்பட்டுள்ளன. சில பாதி எரிந்த நிலையில் வீசப்பட்டுள்ளன." என்று ஒர் கிராமவாசி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு இது பற்றி கூறிய பக்சர் மாஜிஸ்டரேட் அமன் சரின், 30 உடல்கள் 3-4 நாட்கள் பழமையானவை என்றும் அவை பக்ஸரைச் சேர்ந்தவை அல்ல என்றும் கூறினார்.
ALSO READ: நீண்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு புதிய கருப்புப் பூஞ்சை உருவாகிறது: ICMR!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR