மீண்டும் வருகிறதா சேலம் - சென்னை 8 வழிச்சாலை?  

சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தின் நிலையை அரசு அறிவிக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.   

Last Updated : Jan 23, 2022, 03:29 PM IST
  • 8 வழி சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது உழவர்கள் மத்தியில் அச்சத்தைப் அதிகரித்திருக்கிறது.
  • சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக உழவர்களிடம் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும்.
மீண்டும் வருகிறதா சேலம் - சென்னை 8 வழிச்சாலை?    title=

எட்டு வழிச்சாலை பிரச்சனை குறித்து அன்புமணி கூறியதாவது," சென்னை - சேலம் (Salem - Chennai) இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் உழவர்கள்  மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்குவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. இந்த விஷயத்தில்  தமிழக அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமே இந்த அச்சத்தைப் போக்க முடியும். 

ALSO READ | 8 வழி சாலை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் 8-ஆம் தேதி தீர்ப்பு!

சென்னை படப்பையிலிருந்து சேலத்திற்கு எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டம் எந்த நேரமும் மீண்டும் தொடங்கப்படும்; அதற்காக தங்களின் நிலங்கள் மீண்டும் கையகப்படுத்தப்படும் என்ற ஐயம் அச்சாலை அமையவுள்ள 6 மாவட்டங்களின் உழவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. தருமபுரியில் கடந்த திசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உழவர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், இது தொடர்பான தங்களின் ஐயத்தை வெளிப்படுத்திய உழவர்கள், 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரி மனு அளித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து தருமபுரி (Dharmapuri) மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் வ.முகுந்தன் அனுப்பியுள்ள கடிதம் தான் புதிய ஐயங்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ | சேலம் 8 வழிச்சாலை: சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது: PMK

‘‘ஏற்கனவே எட்டு வழிச் சாலைக்காக நில எடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டபோது தனியாரின் பட்டா நிலங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பிரிவு செய்து பெயர் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தனியார் நிலங்கள் அந்தந்த பட்டாதார்கள் பெயரிலேயே உள்ளது. எனவே பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை பாகப் பிரிவினை செய்யவோ, பத்திரம் செய்யவோ, கடன் உதவி பெறவோ எந்தத் தடையும் இல்லை” என்று அந்தக் கடிதத்தில் மாவட்ட வருவாய் அலுவலகர் குறிப்பிட்டிருந்தார். ஆனால்,‘‘தர்மபுரி மாவடத்தில் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது’’ என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

anbumani

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை சந்தித்த மு.க.ஸ்டாலின்  தமிழ்நாட்டில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அது தமிழ்நாட்டு அரசின் நிலை என்றால்,‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது’’ என்று தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருக்கத் தேவையில்லை. மாறாக, 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படாது; அதனால் உழவர்கள் எந்த வகையிலும் அச்சப்படத் தேவையில்லை என்று உறுதியாக கூறியிருக்கலாம். 

salem

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டு உழவர்களிடம் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை  அனுமதிக்க மாட்டோம் என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மாறாக 8 வழிச்சாலை திட்டம் திணிக்கப்பட்டால் அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டப்போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்" என்று கூறியுள்ளார்.

ALSO READ | தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News