புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்!!
கொரோனா வைரஸ் நோய் தொற்றை எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் நடத்தினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்.... ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கூறியும் பொது மக்கள் அலட்சியமாக உள்ளனர். தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார்.
தடையை மீறி தனியார் நிறுவனங்கள் திறந்தால் சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி. மேலும், பால் மற்றும் மருந்துகடைகளை தவிர மற்ற கடைகள் நாளை முதல் மூடப்படும். இந்த உத்தரவை மீறினால் கைது செயல்படுவார்கள் என்றும் கூறினார். புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.