விவசாயிகளின் நிலத்தை அபகரித்தவர்களை சிறையில் அடைக்க பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ராபர்ட் வதேராவை பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி சாடல்!
பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் அவர் அரியானா மாநிலம் பாதேகாபாத், குருசேத்திரம் மற்றும் டெல்லியின் ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பாதுகாப்பு படைகளை வலுவாக்காமல் ஒரு நாடு எப்படி வல்லராசாகும் என்றார். தேர்தல் பிரசாரத்தில் எந்த இடத்திலும் ராணுவம் குறித்து காங்கிரஸ் பேசுவதே இல்லை என்ற அவர், ஆட்சி காலத்தில் ராணுவத்திற்கோ, அல்லது ராணுவத்தை கொண்டோ காங்கிரஸ் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றார்.
ராணுவத்திற்கு ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தை பா.ஜ.க. அரசுதான் நிறைவேற்றியது என்ற அவர், துல்லிய தாக்குதலையும், பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலையும் மத்திய அரசு மேற்கொண்டது என்றார். இந்தியாவை இதுவரை மிரட்டிய பயங்கரவாதிகள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதாக அவர் கூறினார். டெல்லி சீக்கிய கலவரத்தில் தொடர்புடைய கமல் நாத்திற்கு முதலமைச்சர் பதவியை கொடுத்த தன் மூலம் மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் புறந்தள்ளி விட்டதாக அவர் புகார் கூறினார். ஆனால் அந்த கலவரத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை பா.ஜ.க. பெற்றுத் தருமென அவர் உறுதி அளித்தார்.
மேலும், ராணுவப் படைகளை மோடி தமது சொந்த படைகள் போல் பேசக்கூடாது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த மோடி, கடற்படையை தமது சொந்த பயன்பாட்டுக்காக 10 நாட்களுக்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இந்திய போர்க்கப்பலான விராட்டில் விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க, தங்கள் சொந்த டாக்சியைப் போல் சுற்றுலாவுக்காக ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பயன்படுத்தியதாக சாடிய மோடி, அந்தக் கப்பலில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறினார்.
அரியானா மாநிலத்தில் விவசாயிகளின் நிலத்தை அபரித்தவர்கள் இப்போது அமலாக்கத்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் சென்று வருவதாக ராபர்ட் வதேராவை பெயர் குறிப்பிடாமல் மோடி சாடினார். நில அபகரிப்பாளர்களை சிறை வாயில் வரை கொண்டு வந்து விட்டதாகவும், மீண்டும் பா.ஜ.க. மத்தியில் பதவி ஏற்றவுடன் சிறைக்குள் தள்ளும் பணி நடைபெறும் என்றும் மோடி தெரிவித்தார். 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த பா.ஜ.க உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறினார். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வருமென மோடி தெரிவித்தார்.