பெங்களூரு: சசிகலாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவரது சிகிசையில் மெத்தனம் காட்டப்படுவதாகவும் சசிகலாவின் தம்பி திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017 பிப்ரவரி முதல் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவருடன் சுதாகரன், இளவரசி ஆகியோரும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களது நான்கு ஆண்டுகால சிறை தண்டனை முடியும் தருவாயில் உள்ளது. இதற்கிடையில் பல முறை சசிகலா விரைவாகவே விடுதலை செய்யப்படக்கூடும் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், சசிகலா (Sasikala) மட்டும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளதாக கர்நாடகா சிறைதுறையிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. அவரது விடுதலை நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக தேர்தல் களத்தில் பல பரபரப்பான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியுள்ளன. பல வதந்திகளும் ஊகங்களும் பரவி வருகின்றன. சசிகலாவின் குடும்பத்தினரும், அமமுக (AMMK) கட்சியினரும் அவரது விடுதலைக்காக பலமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சசிகலா விடுதலை ஆவதற்கு மிகவும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்ததாகவும், இதனையடுத்து சிறைத்துறை மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ALSO READ: சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?
நேற்று, அதாவது ஜனவரி 20 அன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடையவே அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பெங்களூரு (Bengaluru) சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சோதனைகளின் முடிவில் அவருக்கு நீரிழிவு பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், சளி, காய்ச்சல், ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். சிகிச்சையில் அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டு மற்ற குறைபாடுகளுக்கான மருந்துகளும் அளிக்கப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இப்போது சசிகலாவின் உடல் நலம் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அவருக்கு கொரோனா (Corona) தொற்று ஏற்பட்டிருக்கக்கூடுமோ அன்ற அச்சமும் பரவியது. எனினும், அதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மூச்சுத் திணறலுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சசிகலா விடுதலையாகி வெளிவர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த பத்து நாட்களாகவே சசிகலாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிள்ளது என்றும், ஆனால் சிறையில் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அவருக்கு எக்ஸ்ரே மட்டுமே எடுக்கப்பட்டதாகவும், விரைவில் சசிகலாவிற்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட வேண்டும் என்றும் திவாகரன் கோரியுள்ளார். தங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் இழைக்கப்படுவதாகவும் கூறியுள்ள திவாகரன் அவரது சிகிச்சைக் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சசிகலாவின் உடல்நலம் விரைவில் குணமடைந்து அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வெளிவர வேண்டும் என அமமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ALSO READ: ‘சசிகலாவுக்கு AIADMK-வில் இடம் இல்லை’: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR