தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்க ADMK-PMK அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்க ADMK-PMK அணிக்கு வாக்களிக்குமாறு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!

Last Updated : Apr 16, 2019, 12:25 PM IST
தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்க ADMK-PMK அணிக்கு வாக்களிப்பீர்!  title=

தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்க ADMK-PMK அணிக்கு வாக்களிக்குமாறு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான 17-ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. அத்துடன் சேர்த்து தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களும் நடைபெறவிருப்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்தது தான்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் காலை வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் இடைப்பட்ட காலம் தான், தமிழகம் மற்றும் புதுவையில் வாக்களிக்க வேண்டியது  யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கு மிகவும் பொருத்தமான காலம் ஆகும். மக்களவைத் தேர்தலிலும்,  சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிமுக தலைமையில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணிக்குத் தான் வாக்கு என பெரும்பான்மையான வாக்காளர்கள் முடிவு செய்து விட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் எந்த அணி வென்றால் நல்லது? என்ற அடிப்படையில் ஆதரவைத் தீர்மானிக்கலாம்.

அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம்,  புரட்சி பாரதம் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதையும் முழக்கமாக வைத்து இத்தேர்தலை சந்திக்கிறது. மாநிலங்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டு மக்கள் கண்ணியமாகவும், தலை நிமிர்ந்தும் வாழ முடியும். அதற்கேற்ற வகையில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை  தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஆற்றுநீர் உரிமைகள், அரசியல் உரிமைகள், கல்வி உரிமைகள், கலாச்சார உரிமைகள் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான வாக்குறுதிகளும், திட்டங்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதேபோன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. பாரதிய ஜனதாக் கட்சியும் கூட்டுறவுடன் கூடிய  கூட்டாட்சி தான் எங்கள் கொள்கை என்று கூறி மாநிலங்களுக்கு உரிமை வழங்க முன்வந்திருக்கிறது.

அதிமுக தலைமையிலானக் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பாசன உரிமைகள் வென்றெடுக்கப்படும். காவிரி & கோதாவரி ஆற்று நீர் இணைப்புத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். இதுதவிர ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்துவதாக உறுதியளித்திருக்கிறோம். அதிமுக - பா.ம.க. அணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படும். இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். இவற்றுக்கெல்லாம் மேலாக அதிமுக அணி வெற்றி பெற்றால் தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாக திகழும். பெண்கள் பாதுகாப்பான சூழலில் அச்சமின்றி வாழ வகை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் (ஜாக்டோ ஜியோ), காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர், சத்துணவுப் பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள், நியாயவிலைக்கடை ஊழியர்கள்,  சர்க்கரை ஆலைப் பணியாளர்கள், கிராமப்புற ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் அனைத்தையும்  முதலமைச்சரிடம் நேரில் பேசி நிறைவேற்றச் செய்வேன். மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி நடவடிக்கை எடுக்கும். 

சென்னை -சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும். சென்னை முதல் தூத்துக்குடி வரை வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களையும், உடமைகளையும் பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவற்றை எதிர்த்து நின்று போராடி, மக்களின் உடைமைகளை  மீட்டுக் கொடுத்தவன் என்ற முறையில் வாக்களிக்கிறேன்.... 8 வழிச்சாலைத் திட்டத்தை எந்த வகையிலும்  செயல்படுத்த பா.ம.க. அனுமதிக்காது. அனைத்துத் தரப்பினரிடமும் எடுத்துக் கூறி, அத்திட்டம் ரத்து செய்யப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த சில வாரங்களில் வெளியிடச் செய்வோம். 

சென்னை-விழுப்புரம் - சேலம், சென்னை - வேலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி  விபத்தில்லா சாலைகளாக மாற்றுவோம். வாணியம்பாடியிலிருந்து  அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சேலம் செல்லும் 179-ஏ என்ற எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை விரைந்து முடிப்பதன் புதிய சாலைக்கான தேவையைப் போக்குவோம். அதுமட்டுமின்றி, 3 மாநிலங்களை இணைக்கும் புதுச்சேரி - திண்டிவனம் - கிருஷ்ணகிரி  சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளையும் அதிமுக கூட்டணி விரைந்து நிறைவேற்றும்.

ஆனால், திமுக கூட்டணி வெற்றி பெற்றால் என்ன ஆகும்? தமிழ்நாட்டில் மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் தாரை வார்க்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே இருந்த காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் திமுக ஆட்சியின் போது தான் மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியிடம் தாரைவார்க்கப்பட்டன என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மீண்டும் அதே கட்சிகள் வெற்றி பெற்றால் தமிழகத்தை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது.

திமுக அணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள அப்பாவி மக்களின் நிலங்கள் திமுகவினரால் பறிக்கப்படும். 2006-11 ஆட்சிக்காலத்தில் மட்டும் திமுகவினரால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள 12,500 ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இது எட்டு வழிச்சாலைக்காக கையக்கப்படுத்தப் படவிருந்த நிலங்களை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இப்படிப்பட்டதொரு கொடுங்கோலர்களுக்கு வாக்களிப்பது என்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.

அதுமட்டுமின்றி, திமுகவினர் அடுத்தடுத்து 3 தேர்தல்களில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக பிரியாணிக் கடையை உடைத்து சூறையாடுவது,   அழகு நிலையத்திற்குள் நுழைந்து அங்குள்ள பெண்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது, செல்பேசிக் கடை, தேநீர்க் கடை, சாலைகளில் பூ விற்கும் பெண்கள் ஆகியோரைத் தாக்குவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல்களில் படுதோல்வி அடைந்து வரும் நிலையிலேயே இப்படி என்றால், தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னும் எத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பெரும் அச்சமாக உள்ளது.

தமிழ்நாடு அமைதியாகவும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டியது அவசியம். தமிழகத்தில் பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்புடன் வாழ வேண்டியது கட்டாயமாகும். அதேநேரத்தில் தமிழ்நாடு இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசரத் தேவையாகும். இந்த அனைத்தும் சாத்தியமாக வேண்டும் என்றால் நாளை மறுநாள் நடைபெறும் தேர்தலில் தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம்,  கடலூர், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்.  

அதேபோல் 20 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டபேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி, தென்காசி தொகுதியில் களமிறங்கியுள்ள புதிய தமிழகம் ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், 5 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும், 4 இடங்களில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்திலும், தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆட்டோ சின்னத்திலும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஜக்கு சின்னத்திலும்  வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

Trending News