மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்: நீதிபதிகள்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல் மாணவர்களின் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச் செலவையும் அரசாங்கமே வழங்குகின்றது: நீதிபதிகள்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 9, 2022, 07:10 PM IST
  • கல்வி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்: நீதிபதிகள்
  • கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணம் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நீதிபதிகள் கேள்வி
  • இந்த வழக்கு குறித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்: நீதிபதிகள் title=

மதுரை உசிலம்பட்டி பகுதியில் உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், "நான் சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்தவன். உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கல்லூரி முதல்வர் மற்றும் கள்ளர் கல்விக் கழக செயலாளர் வசூலித்து வருகின்றனர்.

கடந்த 2021-2022 ஆம் ஆண்டு மாவட்ட கல்லூரி இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக 2021 ஆண்டு 12 லட்சத்து 83 ஆயிரம் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி முதல்வர், முதலில் விண்ணப்பம் செய்யும்படியும் பிறகு கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்பது போல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து கல்லூரி வளாகத்திற்குள் டிஎன்டி அமைப்பினர் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், 'அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல் மாணவர்களின் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச் செலவையும் அரசாங்கமே வழங்குகின்றது.

மேலும் கல்வி என்பது மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் சூழ்நிலையும் கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ(BMW) காரிலும் பயணிப்பதுமே தற்போதைய சூழலாக உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணங்கள் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?' என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க | நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வீட்டில் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News